இந்திய சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் பாடகி எஸ்.ஜானகி. திரையுலகினராலும் ரசிகர்களாலும் ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர், தனது அசாத்திய குரல் வளத்தால் பல தசாப்தங்களாக ஒட்டுமொத்த இந்தியாவையும் கட்டிப்போட்டுள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 17 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர்.
1957-ஆம் ஆண்டு வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஜானகி அம்மா தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். இருப்பினும், இவரை உலக அரங்கில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல்தான். நாதஸ்வர இசைக்கு இணையாக அவர் பாடிய அந்தப் பாடல், உலகம் முழுவதும் உள்ள இசைப் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன.
ஜானகி அம்மாவின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட், எந்த ஒரு வயதினரின் குரலையும் அப்படியே பிரதிபலிக்கும் அவரது அசாத்தியத் திறமைதான். 6 வயதுக் குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை தனது குரலில் வித்தியாசம் காட்டி ரசிகர்களைச் சுண்டி இழுத்தார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என அன்றைய தலைமுறை முதல் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் வரை அனைவரின் இசையிலும் எண்ணற்ற முத்திரை பாடல்களை அவர் பாடியுள்ளார்.
குறிப்பாக, இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட்டாக உள்ளது. தனது வசீகர குரலால் ரசிகர்களை மயக்கிய ஜானகி அம்மாவைத் தேடிப் பல உயரிய விருதுகள் வந்துள்ளன. கடந்த 1959-ஆம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரை ஜானகி அம்மா திருமணம் செய்து கொண்டார். ராம்பிரசாத் 1997-ஆம் ஆண்டு மறைந்தார். கணவரின் பிரிவு ஜானகி அம்மாவை ஆழமாகப் பாதித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜானகியும் தனது 88-வது வயதில் மரணமடைந்த நிலையில், அவரது பழைய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல பாடகர் மனோ தொகுத்து வழங்கிய ‘மனதோடு மனோ’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜானகி தனது கணவரின் மறைவு பற்றி பேசுகையில், என் கணவர் எப்போதும் என் பக்கத்தில்தான் இருக்கிறார். அவரைப் பார்க்க முடியவில்லையே என்று நினைக்கும் போது அழுகை வரும். ‘கண்ணா வா கவிதை சொல்வேன்’ பாடலை நான் எப்போதுமே கச்சேரிகளில் பாடியதே இல்லை.
ரெக்கார்டிங்கின் போது எனக்குத் தெரியாமல் பாடிவிட்டேன். இப்போது அதைப் பாடுவதில்லை. அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அதைப் பாடினால் எனக்கு அழுகை வந்துவிடும் என்று தன் கணவர் மீதான காதலையும், அந்தப் பாடலின் பின்னணியில் உள்ள சோகத்தையும் ஜானகி அம்மா கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
