நாக்கைத் துருத்திக் கொண்டு மிரட்டல்: காவலரின் நாகரிகமற்ற செயல்.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் – police personnel must not compromise their dignity bjp nainar nagendran condemns

நேற்றைய தினம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அந்த சமயத்தில் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்ற நிலையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனிடையில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. திபு, அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை மிரட்டியதாக சர்ச்சைகள் எழுந்தது. இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பினை கிளப்பியது.

விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேற்று காலையில் கைது செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 10 மணி நேர விசாரணைக்கு பின்பாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இந்த விஷயம் அறிந்து பத்திரிக்கையாளர்கள் அங்கு வந்த நிலையில், பின்வாசல் வழியாக எம்எல்ஏ மார்க்கண்டேயன் அழைத்து வரப்பட்டார். அவரை செய்தியாளர்களிடம் பேச விடவில்லை. இதனையடுத்து அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை நோக்கி நாக்கை துருத்தி, ஏடிஎஸ்பி திபு மிரட்டியதாக சர்ச்சைகள் வெளியானது.

இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் பரவி பேசு பொருளானது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழக காவல் துறையினரால் முதல்வர் மீது அவதூறு பரப்பியதாக கூறி விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவரிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

அதோடு நாக்கை துருத்திக் கொண்டு பத்திரிக்கையாளர்களை “வாடா, போடா” என தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. திபு ஒருமையில் சாடியுள்ள நாகரிகமற்ற செயல் கண்டனத்துக்கு உரியது. காக்கி சட்டைக்கு என்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு. அதனை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும் என விமர்சித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகிறது. இம்மாதிரியான நிலையில், மிகுந்த கவனத்துடன் காவல்துறையினர் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் நயினார் நாகேந்திரன்.

தொடர்ந்து அவருடைய பதிவில், காவல்துறையை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் விஜய், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது. அதோடு ஜனநாயகத்டின் முக்கிய தூண்களில் ஒன்றான பத்திரிக்கை துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இது மாதிரியான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் நயினார் நாகேந்திரன்.

இதற்கிடையில் நேற்றைய தினம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் காவல்துறையினரின் தடுப்பை மீறி, தன்னை துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தன்னை தாக்குவதாகவும் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். இதனையடுத்து மார்க்கண்டேயன் மகன் அக்சய்யும், போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுவது உண்மையென செய்தியாளர்களிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source link