இத்தகைய சூழலில் தான் ஜந்தர் மந்தரில் 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக், காவல்துறையினரால் கடந்த 18ஆம் தேதி (18.07.2026) காலை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சோனம் வாங்சுக்கை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்கக் கோரி அவருடைய மனைவி கீதாஞ்சலி ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதன்படி இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, “சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக்கூடாது” என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று (21.07.2026) விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வில் விசாராணைக்கு வந்தது, அப்போது மத்திய அரசு சார்பில் சோனம் வாங்சுக்கை டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து நீதிபதிகள், “சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிக்கும் மருத்துவர்களின் அனுமதியின்றி அவருக்கு எந்தவொரு கட்டாய மருத்துவ சிகிச்சையோ திரவ உணவுகளோ வழங்கப்படவில்லை.
சோனம் வாங்சுக்கின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கே முதலிடம் அளிக்கிறோம். அவரது உயிரைக் காப்பதே தற்போதைய முக்கிய நோக்கம் அவரை அனைத்து மருத்துவ ஆவணங்களுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். அதே சமயம், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாலும் அவர் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அங்கிருக்கும் மருத்துவர்களின் முறையான ஆலோசனை மற்றும் அனுமதியின்றி அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படக் கூடாது” எனத் தெரிவித்தனர்.
