அதன் பின்னர் அவரை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடைபெற்ற 9 மணிநேர விசாரணைக்கு பின் நேற்று இரவு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர்.
இந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நீதிபதி சுமதி முன் முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஜீ.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக போலீசார் தரப்பில் போலீஸ் காவலில் எடுத்து ஜீ.வி.மார்க்கண்டேயனை போலீசார் விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கீதா ஜீவன் மற்றும் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. அப்துல் வகாப், கோவில்பட்டி எம்.எல்.ஏ. கருணாநிதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
முன்னதாக கனிமொழி எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
