சிக்கிமில் கட்டுமான பணியின் போது சுரங்கப்பாதை இடிந்து விபரீதம்; 10 பேர் மண்ணில் புதைந்து பலி

காங்டோக்: சிக்கிமில் சுரங்கப்பாதை கட்டுமான பணியின் போது நிலச்சரிவு ஏற்பட்டதால் 10 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

சிக்கிம்மின் நம்சி மாவட்டம் ஜோலுங்கேயில் உள்ள சமர்துங்கில் நீர்மின் திட்டத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் திட்ட அதிகாரிகள், ஊழியர்கள் என 25 பேர் பணியாற்றி வருகின்றனர்.

அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந் நிலையில், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் இறங்கினர். பல கட்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி இருந்த 10 பேரின் சடலங்களை கண்டுபிடித்தனர். அவர்களில் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

மிகவும் உருக்குலைந்து காணப்பட்ட 3 உடல்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. சுரங்கப்பாதையில் 1.5 கிமீ தூரம் மீத்தேன் வாயு தேங்கி இருப்பதால் மீட்பு பணிகள் சவால் நிறைந்தாக உள்ளது.

இது குறித்து முதல்வர் பிரேம்சிங் தமாங் கூறி உள்ளதாவது;

பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரமான தருணத்தில் அனைவரின் மனமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துணையாக இருக்கின்றன. அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம். மீட்புப் பணிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

நடந்த சம்பவம், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் என்னிடம் கேட்டறிந்தனர். அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link