நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கையை முன் வைத்துக் கரப்பான் பூச்சி கட்சி கடந்த மாதம் போராட்டம் நடத்தி வந்தது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட கல்வியாளர் சோனம் வாங்சுக் ஜூன் 28 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டார். இதனிடையே, நேற்று (20-07-26) நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருந்த நிலையில், கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த இருந்தனர்.
அதன்படி, நேற்று காலையில் கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயன்றனர். இவர்களைத் தடுக்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டனர். அதே போல, நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் துணை ராணுவப்படையையும் டெல்லியில் களமிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், பேரணியாகச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாக தாக்கினர். இதனால், இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு படையின் தாக்குதலில் இளைஞர்கள் பலரும் காயமடைந்தனர். அவர்கள் டெல்லி ஆர்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், போலீஸ் நடத்திய தடியடியில் காயமடைந்தவர்களை காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேரில் சென்று அவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் எம்பிக்கள் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இளைஞர்களைச் சந்தித்த பின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் வினாத்தாள் மோசடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தியை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
