“எங்களுக்கு ஒரு அநீதி நடந்திருக்கு” – ‘ஜனநாயகன்’ இயக்குநர் வினோத் பேட்டி!

தவெக தலைவர் முதல்வர் விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. முதலில் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டு திரைப்பட வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காததால் உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று பின்பு வழக்கு வாபஸ் பெற்று பிறகு மொத்த படமும் இணையத்தில் கசிந்து பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்தது. ஆனால் அனைத்து பிரச்சனையும் முடிந்து ஒரு வழியாக நாளை மறுநாளான ஜூலை 23ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. 

இதனால் பட புரொமோஷனில் வினோத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “படத்துக்கு நிறைய தடைகளும் பிரச்சனைகளும் இருந்துச்சு. ஆனா இறுதியா, படம் வெளியாகப் போகுது. எல்லாரும் ஆதரவு தாங்க. இந்த படத்துக்கு அநீதி நடந்திருக்கா, நல்லது நடந்திருக்கா என்பது மக்களுக்கு தெரியும். அதுக்கான நீதி-யாக மக்கள் இந்த படத்தை சப்போர்ட் செய்வாங்க” என்றார்.

தொடர்ந்து மத்திய திரைப்பட வாரியம் குறித்து பேசிய அவர், “முதல்ல யு/ஏ கொடுத்தாங்க. இப்போ ஏ கொடுத்திருக்காங்க. அதை எதிர்த்து போராட வேண்டிய நேரம் எங்களுக்கு இல்லை, சர்டிஃபிகேட் கிடைத்தவுடன் முதல்ல படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமாக இருந்தது. படம் லீக்கான போது அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதிலே இல்லாமல் இருந்தேன். படம் வெளியான பிறகு நமக்கு ஒரு கணக்கு இருக்கும். ஆனால் அது எல்லாமே குழம்பிவிட்டது. ஆனால் நேரம் தான் என்னை அந்த சமயத்தில் மீட்டெடுத்தது. தயாரிப்பாளரும் ஹீரோவும் சப்போர்ட்டாக இருந்தாங்க. அவங்க இரண்டு பேரும் ஒரு புரிதலில் இருந்ததால எங்களுக்கு அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர ஈஸியா இருந்துச்சு. 

சென்சார் மீது எனக்கு எந்த கோபமும் இல்ல. என்ன நடந்துச்சுன்னு இணையத்துல ஆதாரமா இருக்கு. ஆதாரம் இல்லாம எதையும் நான் பேச முடியாது. சட்டத்துக்கு உட்பட்டு ஒரு விஷயம் நடக்கலைன்னா நாம நீதிமன்றத்துக்கு போகலாம். அப்படி நாங்க போகும் போது சர்டிஃபிகேட் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிடுறாங்க. அதுக்கப்புறம் அதுக்கு ஒரு தடை வருது. தடை வந்த பிறகு நீதியை சட்டம் மூலமா சிலர் தாமதப்படுத்துனாங்க. அப்போ எங்களுக்கு ஒரு அநீதி நடந்திருக்கு. என்ன நடந்துச்சுன்னு சொல்ல எங்கிட்ட எந்த ஆதாரமும் இல்ல. ஆனால் மகக்ளுக்கு அது புரிஞ்சிருக்கும். அவங்ககிட்ட தான் அதுக்கான தீர்ப்பு இருக்கு” என்றார். 

Source link