கந்துவட்டி கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு; சாலை மறியலில் உறவினர்கள்!

கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தனது மூத்த மகளின் திருமணச் செலவுக்காக கடந்த 2021ஆம் ஆண்டு சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த கலையரசி என்பவரிடம் பிரேமா ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனுக்கு மாதம் 10% வட்டி என ரூ.20,000 வட்டி கேட்டு பிரேமாவுக்கு கலையரசி தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 13ஆம் தேதி பொதுமண்டபம் அருகே பிரேமாவை தகாத வார்த்தைகளால் திட்டி வட்டித்தொகையை தராவிட்டால் உயிருடன் விடமாட்டோம் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா வீட்டில் இருந்த மூட்டை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று (21-07-26) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து பிரேமாவின் உயிரிழப்பு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து பிரேமாவின் கணவர் ராஜாராம் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source link