எழுதியவர்: தீரஜ் மிஸ்ரா
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), டோல் கட்டண வசூலை மேலும் எளிதாக்கும் நோக்கில், டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்காக டிஜிட்டல் “லோக்கல் பாஸ்” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இ-பாஸை இனி ராஜ்மார்க் யாத்ரா (Rajmargyatra) மொபைல் செயலி மூலமாக சில நிமிடங்களிலேயே வாங்க முடியும்.
முன்பு இந்த மாதாந்திர டோல் பாஸைப் பெற, சம்பந்தப்பட்ட டோல் பிளாசாவுக்கு நேரில் சென்று முகவரி உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. தற்போது அந்த நடைமுறை முழுவதும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
யாருக்கு இந்த வசதி?
டோல் பிளாசாவிலிருந்து 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் தனியார் (வணிகமற்ற) வாகன உரிமையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
தகுதியை உறுதிப்படுத்த, வாகான் (VAHAN) தரவுத்தளத்தின் மூலம் வாகன பதிவு எண், முகவரி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஃபாஸ்டேக் விவரங்கள் தானாகவே சரிபார்க்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை பயனர் கட்டண விதிகளின்படி, மாதம் ரூ.350 செலுத்தி பெறப்படும் இந்த “லோக்கல் பாஸ்” மூலம், அந்த குறிப்பிட்ட டோல் பிளாசாவை ஒரு மாதம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி கடந்து செல்ல முடியும்.
இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி முதற்கட்டமாக டெல்லி நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II (UER-II)-இல் உள்ள முண்ட்கா-பக்கர்வாலா (Mundka-Bakkarwala) டோல் பிளாசாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள மற்ற டோல் பிளாசாக்களிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று NHAI தெரிவித்துள்ளது.
ஏன் இந்த புதிய நடைமுறை?
தடையற்ற டோல் வசூல் (Multi-Lane Free Flow – MLFF) முறையில், வாகனங்கள் டோல் கேட் முன்பு நிற்காமல் செல்ல முடியும். இந்த முறையில், ஃபாஸ்டேக் மற்றும் வாகன பதிவு எண்ணை (ANPR கேமரா) தானாக வாசித்து டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், டோல் பிளாசாவுக்கு அருகில் வசிக்கும் பலர் மாதாந்திர பாஸ் இல்லாமலேயே ஊழியர்களின் பழக்கத்தின் காரணமாக டோலைக் கடந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், தடையற்ற டோல் வசூல் (MLFF) முறையில் தானாகவே அபராத அறிவிப்புகள் (e-Notice) அவர்களது வாகனங்களுக்கு அனுப்பப்பட்டன.
இந்த பிரச்சினைக்கு தீர்வாகவே, ஆன்லைனில் எளிதாக லோக்கல் பாஸ் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது எங்கு தடையற்ற டோல் வசூல் (MLFF) நடைமுறையில் உள்ளது?
தடையற்ற டோல் வசூல் முறை தற்போது பின்வரும் டோல் பிளாசாக்களில் செயல்பட்டு வருகிறது:
டெல்லி – முண்ட்கா-பக்கர்வாலா
குஜராத் – சோர்யாசி (Choryasi)
ராஜஸ்தான் – மனோஹர்புரா, தௌலத்புரா
ஹரியானா – கரௌண்டா (NH-44)
இந்த தடையற்ற டோல் வசூல் (MLFF) திட்டத்தை மேலும் பல இடங்களில் அமல்படுத்த இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் (IHMCL) ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் NH-48-ல் நெமிலி, சென்னசமுத்திரம் மற்றும் NH-45-ல் பரனூர் டோல் பிளாசாக்களில் இந்த தடையற்ற டோல் வசூல் முறை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி அறிமுகமானதால், டோல் பிளாசாவுக்கு அருகில் வசிக்கும் மக்கள் இனி நேரில் செல்லாமல், மொபைல் செயலி மூலமாகவே சில நிமிடங்களில் மாதாந்திர பாஸைப் பெற்று எளிதாக பயணம் செய்ய முடியும்.
