‘2018’, ‘ரேக்காசித்திரம்’ மற்றும் ‘மாளிகப்புரம்’ போன்ற பல படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான காவ்யா ஃபிலிம் கம்பனி, தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தமிழ் திரையுலகில் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளது.
முன்னணி நட்சத்திரமான ஆர். சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 12’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனி மற்றும் சரத்குமார் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இது குறித்து தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி பேசியதாவது, “பல தலைமுறைகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வரும் சரத்குமாரின் நடிப்புத் திறமையும் பன்முகத்தன்மையும் திரைத்துறையினருக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவை. ஒரு வலுவான கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய படக்குழுவும் இணைந்திருக்கும் இத்திரைப்படத்திற்கு சரத்குமார் சாரின் வருகை கூடுதல் பலமாக இருக்கும். இயக்குநர் கமல் பிரகாஷ் இந்த கதையை மிகத் தெளிவோடும் நம்பிக்கையோடும் அணுகியுள்ளார். ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் தொடங்கவுள்ளது. முழு படப்பிடிப்பையும் நவம்பர் 2026-க்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் மாதங்களில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.
