மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17-ல் குடமுழுக்கு: ஐகோர்ட்டில் கோயில் நிர்வாகம் தகவல்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி குடமுழுக்கு (மகா கும்பாபிஷேகம்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோயிலில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என்றும், தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தொகைகளும் வசூலிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த கோயில் நிர்வாக தரப்பு வழக்கறிஞர், வீரவசந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், புதிய நவீன சமையலறை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அனைத்து பணிகளும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்றும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ஆம் தேதி குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கோயில் சொத்துகள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக விளக்கமளித்தார்.

இதையடுத்து, கோயில் சொத்துகள் தொடர்பான ஆக்கிரமிப்புகளை அகற்றிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவின் போது சம்ஸ்கிருத மந்திரங்களுடன் தமிழிலும் மந்திரங்கள் ஓத உத்தரவிட வேண்டும் என கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மற்றும் கோவையைச் சேர்ந்த சுரேஷ் பாபு ஆகியோர் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link