சென்னை: டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு தவெக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவதை தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், டாஸ்மாக் பார்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனிகள் அதிக விலை வைத்து விற்றால் சீல் வைக்கப்படும்.
தின்பண்டம் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர், விற்பனை செய்யும் தின்பண்டங்களுக்கான விலைப்பட்டியலை பார்வைக்கு வைக்கவேண்டும். தின்பண்டங்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவையாக இருக்கவேண்டும்.
அனைத்து தின்பண்டங்களும் உணவுப் பொருள் தரக்கட்டுப்பாடு சோதனைக்கு உட்படுத்தப்படும். ஐஎஸ்ஐ சான்று பெற்ற குளிர்பானங்கள், குடிநீரையே பயன்படுத்த வேண்டும்.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை பார்களில் வைக்கக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கடையை திறக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
