திருச்சி:
108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானதும், ‘பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான அம்மா மண்டபம் படித்துறையில், கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து புரோகிதர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை பன்னெடுங்காலமாக பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடும் முக்கிய இடமாக விளங்கி வருகிறது. ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவது வழக்கம்.
இங்கு தலைமுறை தலைமுறையாக 200க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் அமர்ந்து, பொதுமக்களின் முன்னோர்களுக்கான திதி மற்றும் ஆன்மீகச் சடங்குகளைச் செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் ஊழியர்கள் அம்மா மண்டப பகுதிக்கு வந்தனர். “அம்மா மண்டபம் முழுவதும் கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது; இங்கு புரோகிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து சடங்குகள் செய்வது சட்டப்படி தவறு” எனக் கூறி, அப்பகுதியைக் கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு கற்களை நட்டனர். மேலும், அங்குப் புரோகிதம் செய்து வந்தவர்களின் பொருட்களையும் கோவில் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த கோவில் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே கோவில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக இங்குச் சேவை செய்து வரும் தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயல்வதாகப் புரோகிதர்கள் குற்றம்சாட்டினர்.
கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, புரோகிதர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவியது.
திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திய கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து, தலைமுறை தலைமுறையாக அங்கு பணியாற்றி வரும் புரோகிதர்கள் உடனடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. pic.twitter.com/0FzbgdzWHL
— Indian Express Tamil (@IeTamil) July 21, 2026
ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டத்தைக் கைவிட மறுத்த புரோகிதர்களைக் காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். கைதின் போது ஆவேசமடைந்த புரோகிதர்கள் ஆளும் அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே, அங்கிருந்த பூ வியாபாரிகள், சிறு கடைக்காரர்கள் மற்றும் ஏழைகளிடம், “நாங்கள் இல்லையென்றால் உங்கள் பிழைப்பும் பாதிக்கப்படும்” எனக் கூறி அவர்களையும் போராட்டத்தில் இணைய அழைப்பு விடுத்தது மேலும் பரபரப்பைக் கூட்டியது.
தற்போது ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில், விரைவில் ‘ஆடிப் பதினெட்டு’ மற்றும் ‘ஆடி அமாவாசை’ போன்ற முக்கிய ஆன்மீக நிகழ்வுகள் வரவுள்ளன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளக் கூடிய இந்தச் சூழலில், புரோகிதர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் கோவில் நிர்வாகம் இறங்கியுள்ளது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
– க.சண்முகவடிவேல்
