புதுச்சேரி காமாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்த வழக்கில், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனராகப் பணியாற்றி வந்த சுரேஷ் ராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுவை பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலம் ரெயின்போ நகர் பகுதியில் அமைந்துள்ளது. சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமித்து மோசடி செய்தனர்.
இது தொடர்பாகச் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த மோசடி வழக்கில் அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா மாற்றம் செய்த தாசில்தார் பாலாஜி உட்பட இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் போலி பத்திரங்களை ரத்து செய்து, நிலத்தைக் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க அப்போதைய மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். அதன்படி விற்பனை பத்திரம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 2023 அக்டோபரில் நிலத்தின் ஆவணங்கள் காமாட்சியம்மன் கோவில் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வழக்கின் தொடர் விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு நல்லாம் கிருஷ்ணராய பாபு ஆகியோர் மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், உழவர்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராகச் சுரேஷ் ராஜன் பணியாற்றியபோது, இந்த போலி பத்திரம் பதிவுக்கு உடந்தையாக இருந்தது உறுதியானது. இதற்கான ஆதாரங்களைச் சேகரித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தற்போது செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக உள்ள சுரேஷ் ராஜனைக் கைது செய்து புதுச்சேரி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அவர் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், துறை ரீதியான நடவடிக்கையாக அரசு அவரைத் தற்போது சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
— பாபு ராஜேந்திரன், புதுச்சேரி.
