நேற்றைய தினம் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். முதல்வர் விஜய்யை அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட அவரை நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த அவரை இன்றைய தினம் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி சந்தித்தார்.
சமீபத்தில் திமுகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைதானார். தொடர்ந்து அவரிடம் பத்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார். நேற்றைய தினமே எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது. இப்படியான நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயனை, திமுக் துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, மார்க்கண்டேயன் நன்றாக இருக்கிறார். பாளையங்கோட்டை சிறைச்சாலை திமுகவுக்கு புதிதான ஒன்று இல்லை. தலைவர் கலைஞர் அவர்களே இருந்த இடம் தான். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டதின் போது அவர் இருந்த சிறைச்சாலை தான். எனவே திமுகவை சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் பாளையங்கோட்டை சிறைக்கு வந்தால் பெருமையாக தான் நினைப்பார்கள்.
அப்படி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பெருமையாக ஏற்றுக்கொண்டு தான் பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார். இந்த மாதிரியான அச்சுறுத்தல், கைது, வழக்கு ஆகியவற்றுக்கு பயப்படுபவர்கள் திமுகவில் யாருமே கிடையாது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதனை சந்திப்பதற்கு திமுகவும், எங்களுடைய தலைவர்களும் தயாராக இருக்கிறார்கள் என உறுதியுடன் தெரிவித்தார்.
மேலும் சட்டம் ஒழுங்கு இன்றைக்கு தமிழ்நாட்டில் எந்த நிலைமையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நாளும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதே குற்றம் சொல்லக்கூடிய அளவிற்கு உள்ளது. அவரை கூப்பிட்டு விசாரிப்பதற்கு இந்த அரசு தயாராக இல்லை. ஆனால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தவறாக பேசினார்கள் என்று வழக்கு போட்டு சிறையில் அடைக்கின்றனர்.
யூடியூப்பர், சோசியல் மீடியாவில் பதிவு போடுபவர்களையும் சிறையில் அனுப்புவதற்கு இந்த அரசு தயாராகி வருகிறது. ஜனநாயகத்தில் தங்களுக்கு துளியும் அக்கறை இல்லை என்பதை தவெக நிரூபித்து வருகிறது என கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் கனிமொழி. மேலும், முதல்வராக எங்களுடைய தலைவர் மு.க. ஸ்டாலின் இருந்த சமயத்தில் தவெகவை சார்ந்தவர்கள் எவ்வளவு விமர்சித்து பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அப்போது திமுக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஜனநாயகத்தில் தவெக மீது நம்பிக்கை இல்லை. யாருக்கு பயந்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய வழியில் தான் ஆட்சி நடத்துகிறார்கள் எனவும் தவெக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக யாருடைய பெயர் சொல்லக்கூட அஞ்சுகிறார்களோ, அந்த பாஜகவிற்கு பயந்து தான் ஆட்சி நடத்துகிறார்கள் எனவும் கனிமொழி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
