“தவெகவுக்கு ஜனநாயகத்தில் அக்கறையும், நம்பிக்கையும் இல்லை”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று (20.07.2026) காலை 5 மணி அளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் வருகை தந்தனர். காலை 6 மணி அளவில் போலீசார் ஜீ. வி. மார்க்கண்டேயனை அதிரடியாகக் கைது செய்தனர்.

அதன் பின்னர் அவரை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடைபெற்ற 9 மணிநேர விசாரணைக்கு பின் நேற்று இரவு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நீதிபதி சுமதி முன் முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஜீ.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி கனிமொழி, சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கீதா ஜீவன் மற்றும் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. அப்துல் வகாப், கோவில்பட்டி எம்.எல்.ஏ. கருணாநிதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த பிறகு கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மார்க்கண்டேயன் நலமாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ மீதே குற்றம் சொல்லக்கூடிய அங்கே அளவிற்கு குற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கிற சூழலில் அவரை அழைத்து விசாரிப்பதற்கு கூட இந்த அரசு தயாராக இல்லை. இந்த நிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தவறாக பேசினார் என்பதற்காக கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய ஒரு நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரை மட்டுமல்ல, அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் அச்சுறுத்தலும் வழக்கும் போடப்பட்டுள்ளது. அவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சி செய்தார்கள். கருத்துக்கள் சொல்லக்கூடிய யூடியூபர்கள், சோசியல் மீடியாவில் பணியாற்றக் கூடியவர்களை எல்லாம் சிறைக்கு அனுப்ப இந்த அரசு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது.

தவெகவுக்கு ஜனநாயகத்தில் கொஞ்சமும் அக்கறை இல்லை, நம்பிக்கை இல்லை, மக்கள் மீது கவலையும் இல்லை. தங்களுடைய காவல்துறையை எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தவெகவை சார்ந்தவர்கள் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்த போது அவரை விமர்சித்து பேசி இருக்கின்றனர். அப்போது திமுக இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தங்களை யார் விமர்சனம் செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் யாருக்கு பயந்து கொண்டு அரசியல் செய்கிறார்களோ அதே வழியில் தான் அவர்களும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள திமுகவினர் தயாராக இருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலுக்கும் திமுகவினர் அஞ்ச மாட்டார்கள்” என்று தெரிவித்தார். 

Source link