சென்னையிலும் தொடரும் போராட்டம்; மாணவர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கையை முன் வைத்து கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து நேற்று (20-07-26) நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை காவல்துறையினரும் துணை ராணுவப்படையினரும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாக தாக்கினர். இதனால், இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு படையின் தாக்குதலில் இளைஞர்கள் பலரும் காயமடைந்தனர். அவர்கள் டெல்லி ஆர்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இருப்பினும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கரப்பான்பூச்சி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூர் அருகே இன்று (21-07-26) மாலை கரப்பான் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கரப்பான்பூச்சி கட்சிக்கு ஆதரவாக எஸ்.எஃப்.ஐ, டி.ஒய்.எஃப்.ஐ ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும் களமிறங்கி அங்கு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அங்கு வந்து, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்களை எட்டி உதைக்கும் காவல்துறையினர் ஒழிக என்று முழக்கமிட்டபடி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். 30 நிமிடத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் அந்த இளைஞர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Source link