செங்கல்பட்டு, கோவை, மதுரை உட்பட 6 மாவட்டங்களுக்கு புதிய போக்சோ நீதிபதிகள்; தலைமைப் பதிவாளர் உத்தரவு

தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் காலியாக உள்ள ‘போக்சோ’ (POCSO) சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில், 6 மாவட்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையைச் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (Registrar General) தீப்தி அறிவுநிதி வெளியிட்டுள்ளார் 

செங்கல்பட்டு வணிகவியல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம். ராஜலட்சுமி, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வணிகவியல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே. ஹரிஹரன், கோயம்புத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதியாக மாற்‌றப்பட்டுள்ளார்.

கடலூர் மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதியாகப் பணியாற்றிய ஜி. குலசேகரன், கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்ட சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதியாக இருந்த பி. கணேசன், திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

மதுரை சமூக மோதல்கள் தொடர்பான வழக்குகள் விசாரணை நீதிமன்ற அமர்வு நீதிபதியாக இருந்த டி. ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி விரைவு மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதியாக இருந்த எம்.பி. முருகன், தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக உள்ள இடங்களை உடனே நிரப்பி வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link