அரசு மருத்துவ கல்லுாரிகளில் நர்சிங் இடங்கள் 1,651 ஆக உயர்வு!

சென்னை: தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், ‘நர்சிங்’ மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள், 769ல் இருந்து, 1,651 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள் போல், நர்சிங் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கல்வியாண்டு, புதிதாக 855 நர்சிங் இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

திருச்சி, திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய ஆறு மருத்துவ கல்லுாரிகளில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 40 கோடி ரூபாய் நிதியுதவியுடன், நர்சிங் கல்லுாரிகள் கட்டப்பட்டு வருகின்றன. அங்கு தலா, 100 பி.எஸ்சி., நர்சிங் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேபோல், கோவை இ.எஸ்.ஐ., அரசு மருத்துவ கல்லுாரிக்கு, 60 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, மாநிலத்தின் மொத்த பி.எஸ்சி., நர்சிங் இடங்கள், 510ல் இருந்து, 1,170 ஆக உயர்ந்துள்ளன.

மேலும், செங்கல்பட்டு, தேனி மற்றும் கடலுார் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லுாரிகளில், தலா, 40 இடங்கள் வீதம், மொத்தம் 120 போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன .செங்கல்பட்டு, சேலம், தேனி அரசு மருத்துவ கல்லுாரிகளில், தலா 25 இடங்கள் என, மொத்தம் 75 எம்.எஸ்.சி., செவிலியர் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், நர்சிங் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள், 769ல் இருந்து, 1,651 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், விரைவில் அரசாணை வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link