தேர்தலை புறக்கணிக்க ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கும் கோஷம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிக்குமாறு, ஜேஏசிசி எனப்படும் அவாமி அதிரடி கூட்டுக்குழு தலைவர், உமர் நசீர் காஷ்மீரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், வரும் 27ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான சட்டங்களை இயற்றுவதற்கும், வரவு – செலவு திட்டங்களுக்கும், பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கும் இச்சட்டசபை செயல்படுகிறது.

இங்கு தேர்தல் என்ற பெயரில், தன் செயல்களுக்கு உதவியாக இருக்கும் நபர்களை பதவிக்கு கொண்டு வர பாகிஸ்தான் முயற்சிக்கிறது. அதற்காக அனைத்து விதமான அடாவடி செயல்களையும் செய்து கொண்டிருக்கிறது.

மொத்தமுள்ள 53 இடங்களில், 12 தொகுதிகள் அகதிகளுக்காக என்ற பெயரில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு போராட்டங்களை ஒருங்கிணைக்கும் ஜேஏசிசி அமைப்பினர் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இத்தேர்தல் ஒரு போலி நாடகம் என்று ஜேஏசிசி அமைப்பின் முக்கிய தலைவரான உமர் நசீர் காஷ்மீரி விமர்சித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுபவர்களும், அதற்கு துணை நிற்பவர்களும் நம் மண்ணிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் கொலையாளிகள் ஆவர். இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து, அதை முற்றிலுமாக புறக்கணித்து மக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும், என, அவர் கூறியுள்ளார்.

Source link