படம் எடுக்க யாருமே நம்பி பணம் தரவில்லை: தடைகளைத் தாண்டி தேசிய விருது வென்ற பழங்குடியின இயக்குநர்

ஜார்ஜ்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சிறிய ஆதிவாசி கிராமத்தில் வளர்ந்தவர் ரவி ராஜ் முர்மு. புத்தகங்கள் அல்லது தொலைக்காட்சி மூலமாக இல்லாமல், மூத்தோர்களின் குரல்கள் வழியே மாலை நேரங்களில் கதை கேட்டு வளர்ந்த நினைவுகள் அவருக்கு இன்றும் பசுமையாக இருக்கின்றன. பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் கூறிய சந்தாளி நாட்டுப்புறக் கதைகள், ‘போங்கா’ (தேவதைகள்/ஆவிகள்), காடுகள், ஆறுகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத உலகங்களைப் பற்றிய கதைகள் எனத் தலைமுறை தலைமுறையாக ஆதிவாசி சமூகங்களை வடிவமைத்த வாய்மொழிப் பாரம்பரியம் அவரை ஆழமாகப் பாதித்தது. ஆண்டுகள் பல கழித்து, அந்தப் பாரம்பரியக் கதைகளில் ஒன்று முர்முவை இந்தியாவின் உயரிய சினிமா மேடைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

ஜார்ஜ்கண்டைச் சேர்ந்த 33 வயதான சந்தாளி பழங்குடியினத் திரைப்படப் படைப்பாளி ரவி ராஜ் முர்மு, தனது 12 நிமிட சந்தாளி குறும்படமான ‘அங்கன்’ (Angen) படத்திற்காக 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘இயக்குநரின் சிறந்த அறிமுகத் திரைப்படம்’ (Best Debut Film of a Director) விருதை வென்றுள்ளார். ‘அங்கன்’ என்ற வார்த்தைக்கு “கண்ணுக்குத் தெரியாத”, “காணாமல் போன” அல்லது “மறைந்த” என்று தோராயமாகப் பொருள்படுத்தலாம். ஆங்கிலத்தில் இதற்கு நேரடி இணையான வார்த்தை இல்லை என்றாலும், ஏதோ ஒன்று இருக்கிறது ஆனால் மெதுவாகக் கண் பார்வையில் இருந்து நழுவிச் செல்கிறது என்பதை இவ்வார்த்தை உணர்த்துகிறது என்று முர்மு கூறுகிறார்.

இந்த அங்கீகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய திரைப்பட விருதை வெல்லும் முதல் சந்தாளி மொழித் திரைப்படம் ‘அங்கன்’ ஆகும். மேலும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்படும் ஆதிவாசி மொழியிலான இரண்டாவது புனைகதை திரைப்படமும் இதுவே. இதற்கு முன் 2016-ல் நடைபெற்ற 63-வது தேசிய திரைப்பட விருதுகளில், உரோன் (Oraon) பழங்குடியினச் சேர்ந்த நிரஞ்சன் குஜூர் இயக்கிய ‘எட்பா கானா’ (Edpa Kana – வீடு திரும்புதல்) என்ற குரூக் (Kurukh) மொழி குறும்படம் சிறந்த ஒலிப்பதிவுக்கான (Best Audiography) விருதை வென்றிருந்தது. அதற்கு முன்பு தேசிய விருது பெற்ற ஆதிவாசி இயக்குநர்களின் படங்கள் இந்தி மொழியிலேயே உருவாக்கப்பட்டிருந்தன.

முர்முவைப் பொறுத்தவரை, இந்த விருது தனிப்பட்ட அங்கீகாரத்தை விட அவர் எப்போதும் சொல்ல விரும்பிய கதைகளுக்கான மரியாதையாகவே கருதுகிறார். நான் எழுதும் ஒவ்வொரு கதையும் ஜார்ஜ்கண்டில் இருந்தே உருவாகிறது. அவை ஆதிவாசி வாழ்க்கையில் வேரூன்றியவை. ஒரு கட்டத்தில், இந்தக் கதைகளை நேர்மையாகப் படமாக்க வேண்டும் என்றால், நான் எனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்பதை உணர்ந்தேன் என்கிறார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த முர்மு, ஜாம்ஷெட்பூரில் மக்கள் தொடர்பியல் (Mass Communication) பயின்றார். பின்னர் புனேவில் உள்ள புகழ்பெற்ற இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (FTII) சேர்ந்து, 2016 முதல் 2019 வரை படத்தொகுப்பு (Editing) துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றார். அதன் பிறகு மும்பையில் நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்களின் திட்டங்களிலும், விளம்பரப் படங்களிலும் பணியாற்றினார்.

முதன்மைச் சினிமாவில் பணியாற்றிய போதிலும், தனது சிறுவயதுக் கதைகளுக்கே அவர் மீண்டும் திரும்பினார். “நமது சொந்தக் கதைகளில் அபார பலம் உள்ளது என்பதை உணர்ந்தேன். நீண்ட காலமாகப் பிறருடைய கதைகளைப் பார்த்தே நாம் வளர்ந்தோம். சந்தாளி சினிமா தனது சொந்தக் கதையைத் தானே சொல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன்” என அவர் கூறுகிறார்.

சுமார் 7 ஆண்டுகளாக முர்மு எழுதி வரும் முழுநீளத் திரைப்படத்தின் ஒரு பகுதியாகவே ‘அங்கன்’ முதலில் உருவானது. ஆனா தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் இது குறும்படமாக மாறியது. ஒரு முழுநீளப் படத்திற்கு ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை முதலீடு தேவைப்படும். தயாரிப்பாளர்கள் கிடைக்காததால், பெரிய கதை என்னவாக இருக்கும் என்பதை மக்களுக்குக் காட்டுவதற்காக முதலில் ஒரு குறும்படத்தை உருவாக்க முடிவெடுத்தேன் என்று அவர் விளக்குகிறார். தேசிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக, இக்குறும்படம் மும்பை சர்வதேசத் திரைப்பட விழா உட்படப் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டது.

சந்தாளி நாட்டுப்புறக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘அங்கன்’, சுக்கு (Sukku) என்ற புல்லாங்குழல் கலைஞனின் கதையைப் பின்தொடர்கிறது. அவனது இசை, ஆவி உலகில் வாழும் தேவதையை வசீகரிக்கிறது. மனித உலகத்தையும் ஆன்மீக உலகத்தையும் இணைக்கும் ஒரு வாயிலாகச் (Portal) செயல்படும் நீர் வழியாக அவன் அந்தத் தேவதையின் உலகத்திற்குள் ஈர்க்கப்படுகிறான். பின்னர் தான் இனி அந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதை உணரும் சுக்கு, மீண்டும் தனது கிராமத்தை தேடத்தொடங்குகிறான். அந்த தேடல் ஒருபோதும் முடிவடைவதில்லை என்று கூறும் முர்மு, படத்தின் பெரிய வடிவமான முழுநீளப் படம் இன்னும் உருவாக்கப்பட்டு வருவதால், இக்குறும்படத்தின் முடிவை அவர் வேண்டுமென்றே திறந்தவெளியாக (Open-ended) விட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

புராணக் கதையைத் தாண்டி, பழங்குடி/ஆதிவாசி மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ‘அங்கன்’ பிரதிபலிக்கிறது. ஒரு காலத்தில் ஆதிவாசிகளின் ஆன்மீக வாழ்க்கையோடு பிணைக்கப்பட்டிருந்த நிலப்பரப்புகளை, அதிவேக நகர்மயமாக்கல் எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை இப்படம் அமைதியாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. நகர்மயமாக்கல் விரிவடையும் போது காடுகள் மறைகின்றன, இயற்கை இடங்கள் சுருங்குகின்றன, மேலும் அந்த ஆன்மீக இடைவெளிகளும் கூட மெதுவாகக் மறையத் தொடங்குகின்றன என்பதை உருவகங்கள் மூலம் இப்படம் உணர்த்துகிறது.

படத்தில் ‘நீர்’ என்ற காரணி உணர்வுப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முர்மு கூறுகிறார். அறிவியல் கூற்றுப்படி உயிரினங்கள் நீரில் இருந்தே தோன்றின. அதனால் தான் ஒரு உலகத்தை மற்றொரு உலகத்துடன் இணைக்கும் ஊடகமாக நீரை நான் அமைத்தேன் என்கிறார். படத்தின் தலைப்பும் பல அடுக்கு அர்த்தங்களைக் கொண்டது. அங்கன் என்ற சொல்லுக்கு நேரடி மொழிபெயர்ப்பு இல்லை. இதை நீங்கள் கண்ணுக்குத் தெரியாதது, மறைந்தது அல்லது காணாமல் போனது என்று அழைக்கலாம், ஆனால் எந்த வார்த்தையும் இதன் முழுமையான அர்த்தத்தை வெளிப்படுத்த முடியாது என்கிறார்.

ஆதிவாசிகளின் மறைந்து வரும் உலகத்தைக் காட்டும் இந்த யோசனை, புனேவிலிருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது முர்முவுக்கு தோன்றியது. கிராமத்தின் அருகே களுடிஹ் (Galudih) பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கிய முர்முவால், புதிய உள்கட்டமைப்பு மாற்றங்களால் அந்த இடத்தை அடையாளம் காண முடியவில்லை. இடங்கள் எவ்வளவு விரைவாக மாறுகின்றன என்பதை அது எனக்கு உணர்த்தியது. நமது கதைகளை இப்போது நாம் ஆவணப்படுத்தாவிட்டால், அவற்றில் பல என்றென்றும் மறைந்துவிடும் என்கிறார்.

நண்பர்கள், நாடகக் கலைஞர்களின் ஆதரவோடு குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தில், மூத்த சுக்கு கதாபாத்திரத்தில் டெல்லி தேசிய நாடகப் பள்ளியின் பட்டதாரி ஜித்ரே ஹன்ஸ்டாவும், இளைய சுக்குவாக ராமச்சந்திரன் மர்டியும், கதாநாயகியாக சலோனி சோரனும் நடித்துள்ளனர். இத்திட்டத்தை நம்பிய நபர்களுடன் நான் பணியாற்றினேன். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது என்று முர்மு நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

‘அங்கன்’ தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நிலையிலும், முர்மு ஏற்கனவே தனது முதல் முழுநீளத் திரைப்படத்திற்கான பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார்; இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராமத்து வீடுகளின் வாசலில் கதைகளைக் கேட்டு வளர்ந்த பழங்குடி இயக்குநருக்கு, வாய்மொழிப் பாரம்பரியத்தில் இருந்து தேசிய திரைப்பட விருது வரையிலான இந்தப் பயணம் தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல. நினைவுகளிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் மட்டுமே முடங்கிக்கிடந்த ஆதிவாசி மொழிக் கதைகள், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய சினிமா மேடையில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளன என்பதற்கான நினைவூட்டல் இது… அதனால்தான் பிரதிநிதித்துவம் (Representation) மிக முக்கியமானது என்று அவர் உறுதியுடன் கூறுகிறார்.

Source link