சென்னை: ‘தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று, இடி, மின்னல், காற்றுடன் லேசான மழை பெய்யக்கூடும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே லேசான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில், 5 செ.மீ., மழை பதிவானது.
அதேசமயம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரித்தது.
இதன்படி, மதுரையில் 39 டிகிரி செல்ஷியஸ், அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளி மண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதனால், இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதே நிலை, 25ம் தேதி வரை தொடரலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
