தெரு நாய்கள் தொல்லை பிரச்னை; அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: ‘ தெரு நாய் பிரச்னையை தடுக்க, எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை’ என, தமிழக அரசு மீது, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தெரு நாய்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பஸ், ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், அறிக்கை தயாராக இருப்பதாகவும், ஒரு வார கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

‘தெரு நாய்க்கடி சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள், தெரு நாய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டியுள்ளது. ஆனால், தெரு நாய்கள் பிரச்னையை தடுக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை’ என, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ‘சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ‘தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; அரசின் அறிக்கையில் வேண்டுமானால் நடவடிக்கை குறித்த விபரங்கள் இருக்கலாம்; ஆனால் நேரில் எதுவும் தெரியவில்லை’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர் .

Source link