ரூ.30,000 வரை உயரும் மாருதி கார்கள் விலை

புதுடில்லி: அதிகரித்து வரும் மூலப்பொருள் செலவின் ஒரு பகுதியை சமாளிக்கும் வகையில், தனது அனைத்து மாடல் கார்களின் விலையை 30,000 ரூபாய் வரை உயர்த்த மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் அதிக விற்பனையும், வாடிக்கையாளர்களின் அதிக வரவேற்பும் பெற்ற மாருதி சுசூகி நிறுவனம், ஆரம்ப நிலை ‘எஸ் பிரெஸ்ஸோ’ முதல் பிரீமியம் பயன்பாட்டு வாகனமான ‘இன்விக்டோ’ வரை பல்வேறு கார் மற்றும் எஸ்.யு.வி., மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் எக்ஸ் ேஷாரூம் விலை 3.50 லட்சம் முதல் 28.70 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

இந்த நிலையில், உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனது வாகனங்களின் விலையை உயர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் அறிக்கை:

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல், மாடலுக்கு ஏற்ப கார் விலை அதிகபட்சமாக 30,000 ரூபாய் வரை உயர்த்தப்படும். ஒவ்வொரு மாடலுக்கும் விலை உயர்வு மாறுபடும். கடந்த சில மாதங்களாக செலவு குறைப்பு நடவடிக்கைகள் வாயிலாக, மூலப்பொருள் விலை உயர்வின் தாக்கத்தை கட்டுப்படுத்த நிறுவனம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது.

இருப்பினும், உற்பத்தி செலவு தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதன் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மீதான தாக்கத்தை குறைந்த அளவில் வைத்திருக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source link