போலீசாருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

உடுமலை: ”தி.மு.க., ஆட்சியில் நிரந்தர டி.ஜி.பி., கூட நியமிக்க முடியவில்லை; அரசியல் தலையீடு இல்லாமல் போலீசார் சுதந்திரமாக செயல்பட த.வெ.க., அரசு அனுமதித்துள்ளதால், சட்டம், ஒழுங்கு பிரச்னை குறைந்து வருகிறது,” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். பி.ஏ.பி., பாசனத்திட்டம் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது :

பி.ஏ.பி., பாசன திட்டத்தால், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இத்திட்டத்தில் விடுபட்டுள்ள ஆனைமலையாறு, நல்லாறு அணை உள்ளிட்ட பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தவும், விவசாய சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், கடைமடை விவசாயிகள் வரை, முறையாக நீரை பகிர்ந்து அளிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

திருமூர்த்திமலை சுற்றுலாவை மேம்படுத்த, ரூ.18 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அமராவதி அணை சுற்றுலா மையம் என இரு மையங்களிலும், பூங்கா, படகு இல்லம் என அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

மலைவாழ் மக்களுக்கு ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு வந்து, சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறியுள்ளார்.

சீரழிவுக்கு காரணம், அவர்கள் ஆட்சியில் அதிகரித்திருந்த போதை பழக்கம், சட்டம் ஒழுங்கு பிரச்னையே காரணம். தி.மு.க.,ஆட்சியில், 3 ஆண்டுகளாக, நிரந்தரமாக ஒரு டி.ஜி.பி., கூட நியமிக்கவில்லை.

தற்போது, த.வெ.க., அரசு, அரசியல் தலையீடு இல்லாமல், போலீசார் சுதந்திரமாக செயல்பட அனுமதியளித்து, சட்டம் ஒழுங்கை சரி செய்ய, ஆராய்ந்து தெளிவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை கடந்த ஆட்சியை விட குறைந்து வருகிறது. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Source link