கிணத்துக்கடவு: ”யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் விக்னேஷ் உறுதி அளித்தார்.
கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலகம் வந்த, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:
கல்குவாரி விதிமீறலுக்கு எதிராக, நெ.10.முத்தூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது குறித்த தகவல், தற்போது தான் கிடைத்தது. இது குறித்து முறையான விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் மற்றும் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள பல டாஸ்மாக் மதுக்கடைகளின் முன்பாக, குப்பை குவிந்து காட்சியளிப்பதுடன், கடை முன் சிலர் படுத்து உறங்குவதும் நடக்கிறது. இதை சரி செய்வதற்காக, டாஸ்மாக் மதுக்கடைக்கு பதில், ‘ரெஸ்ட்ரோபார்’ ஆக மாற்றுவது, தனியாருக்கு கொடுப்பது, முழுவதுமாக டாஸ்மாக்கை அகற்றுவது உள்ளிட்டவை கலந்துரையாடலில் உள்ளது. கூடிய விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
அப்போது, ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதால் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு, த.வெ.க.,வை சேர்ந்த சிலர் விற்பனை செய்வது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ”கட்சியில் உள்ள நபர் யாராக இருந்தாலும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்தாலும் தவறு தான். தவறு செய்த நபர் பெரிய பொறுப்பில் இருந்தாலும் உடனடியாக நீக்கப்படுவர்,” என்றார்.
