மதுரை: மதுரையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, லண்டனில் உள்ள ஆசிரியை மகன் முதல்வர் விஜய்க்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சீனித்தாய். இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். ஓய்வூதிய பலன், மாதம் ஓய்வூதியம் பெற கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) முத்துக்குமார் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக பெற்றார் என புகார் அளித்தார். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
இந்நிலையில் லண்டனில் பொறியாளராக பணியாற்றும் அந்த ஆசிரியையின் மகன் சதீஷ், அங்கிருந்து முதல்வர் விஜய் அறிவித்த ‘லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்’ தமிழக அரசின் வாட்ஸ் அப் எண், முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: என் தாய் சீனித்தாய் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்கு தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்று (நோ அப்ஜெக் ஷன், நோ டியூ சர்ட்டிபிகேட்) பெற பி.இ.ஓ.,வுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஓய்வூதிய பலன்கள் கிடைத்த நிலையில், மாத ஓய்வூதியம் கிடைக்கவிடாமல் இழுத்தடிக்கின்றனர். ஓய்வூதியம் கிடைக்கவும், ரூ.40 ஆயிரத்தை திரும்ப பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சீனித்தாய் கூறுகையில், ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே பி.இ.ஓ.,வுக்காக என்னிடம் தலைமையாசிரியர் வாசுதேவன் பேசி இத்தொகையை பெற்றார். துபாயில் உள்ள என் மற்றொரு மகன் ரோஹித் தான் ரூ.30 ஆயிரத்தை வாசுதேவனுக்கு அனுப்பினார். நான் ரூ.5 ஆயிரம் பி.இ.ஓ.,விடம் நேரில் கொடுத்தேன். என் புகார் மீது சரிவர விசாரிக்கவில்லை என்றார்.
சம்பந்தப்பட்ட முத்துக்குமார் கூறுகையில், இதுகுறித்த புகார் மீது திருமங்கலம் தொடக்கக் கல்வி டி.இ.ஓ., விசாரணை நடத்தி புகாரில் உண்மை இல்லை என அறிக்கை அளித்து விட்டார். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, வாங்கவில்லை என்றார்.
