அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு செய்தார். அங்கு நடந்த ஸ்ரீராம யந்திரம் ஸ்தாபன நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை புரிந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, 150 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட ஸ்ரீ ராம யந்திரம் எனப்படும் தகட்டை ஸ்தாபன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதன்பிறகு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் அவர் பேசியதாவது; புனிதமான ராம ஜென்மபூமியில் நடந்த பூமி பூஜை, பிராண பிரதிஷ்டை, பக்தர்களுக்காக திறக்கப்பட்ட ராம தர்பார் மற்றும் கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ள கொடி என இவை அனைத்தும் நமது வரலாற்றின் பொன்னான தருணங்கள். கடவுள் ராமருக்கு சொர்க்கத்தை விட அயோத்தி தான் மிகவும் விருப்பமானது. இந்தப் புனித மண்ணில் கால் எடுத்து வைத்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
நமது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் குறித்த 3வது பகுதியின் தொடக்கத்தில், ராவணன் உடனான போரில் வெற்றி பெற்று சீதை மற்றும் லட்சுமணனுடன் ராமர் அயோத்தி திரும்பும் அழகான ஓவியம் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும், ராம பக்தர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முடிவில் வரும் ராம நவமி தினத்தன்று, நாம் அனைவரும் ஸ்ரீ ராமரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் முன்கூட்டியே ராம நவமி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
