நானொரு சிந்து, காவடி சிந்து… இளையராஜா பாடியதை கேட்டு கை, கால் நடுங்கிய கே.பாலச்சந்தர்: ஆனா பாட்டு செம்ம ஹிட்டு

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட கே.பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி படத்திற்காக இசையமைத்த இளையராஜா, ஒரு பாடலுக்கான டியூனை வாசிக்கும்போது அதை கேட்ட பாலச்சந்தர், கை, கால் நடுங்கிப்போய்விட்டார் என்று இளையராஜாவே ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 

தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாக வைத்து அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கியவர் கே.பாலச்சந்தர். இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவரது காலக்கட்டத்தில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இவர் பணியாற்றியதே இல்லை. சிவாஜியுடன் மட்டும் எதிரொலி என்ற படத்தில் பணியாற்றினார், ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

அதே சமயம், எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு அடுத்த இடத்தில் இருந்த முத்துராமன், ஜெமினி கணேசன், உள்ளிட்ட நடிகர்களை வைத்து படம் இயக்கி வெற்றி கண்ட கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். நாகேஷ் நாயகனாக நடிக்க ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் அவருக்கு பிடித்த நடிகரும் நாகேஷ்தான். தான் இயக்கிய ஆரம்ப கட்ட படங்களுக்கு வி.குமார் என்பவரை இசையமைப்பாளராக பயன்படுத்திக்கொண்டார் பாலச்சந்தர். 

அதன்பிறகு அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். 1970-களின் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பை பெற்று வந்த காலக்கட்டங்களிலும், பாலச்சந்தர் எம்.எஸ்.வியுடன் பணியாற்றி பல வெற்றிகளை குவித்து வந்தார். 1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக இளையராஜாவை அணுகியுள்ளார். இசை தொடர்பான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

இன்றும் இந்த பாடல்கள் கேட்டு ரசிக்கும் வகையில் புதுமையாக அமைந்திருப்பதே அதன் சிறப்பு தான். இந்த படத்திற்கு இசையமைக்கும் பணி நடைபெற்று வந்தபோது கே.பாலச்சந்தர் சொன்ன ஒரு சுட்சிவேஷனுக்கு, இசையமைத்த இளையராஜா, அதற்கு நானொரு சிந்து காவடி சிந்து என்று பாடலாகவே பாடி காட்டியுள்ளார். இதை கேட்ட கே.பாலச்சந்தர், கை, கால் நடுங்கிப்போய், தனது உதவியாளரை அழைத்து, அந்த நோட்டை எடு என்று சொல்லி ஒரு நோட்டை வாங்கியுள்ளார். அதில் இந்த சுட்சிவேஷனுக்கு வரும் பாடல் நானொரு சிந்து என்று ஆரம்பிக்க வேண்டும் என்று பாலச்சந்தர் ஏற்கனவே எழுதி வைத்திருந்துள்ளார். 

அவர் எழுதியது தெரியாத இளையராஜா, அதே வார்த்தையை பாடலின் முதல் வரியாக கொடுத்தபோது ஆச்சரியமான பாலச்சந்தர், இது எப்படி என்று கேட்க, நீங்கள் கதை சொல்லும்போதே உங்களுக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு தெரிய வேண்டும். அப்போது தான் நான் ஒரு இசையமைப்பாளர். நீங்கள் கேட்பதை கொடுக்க நான் தேவையில்லை. நீங்கள் மனதில் நினைப்பதை கொடுக்க வேண்டும். அதுதான் ஒரு இசையமைப்பாளரின் வேலை என்று இளையராஜா பதில் அளித்துள்ளார்.

Source link