சென்னை மாநகராட்சியில் பல்வேறு விதமான டெண்டர்கள் கோருதல் மற்றும் அவற்றை முறையாக செயல்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ் முக்கிய நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார். இதன்மூலம் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ் சிறப்பான முறையில் செயல்படக் கூடியவர் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார். உதாரணமாக கோவை, ராமநாதபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் நில வருவாய், மீன்வளம், விலங்குகள் நலத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், வீட்டுவசதி வாரியம் ஆகிய துறைகளில் பொறுப்பு வகித்ததை சொல்லலாம். ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் இணை ஆணையராக பணியாற்றிய அனுபவம், தற்போது ஆணையராக செயல்படுவதற்கு பெரிதும் உதவி செய்து வருகிறது.
ஊழலற்ற நிர்வாகம் – முதல்வர் விஜய் அதிரடி
குறிப்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என விரும்புகிறார். இதன் அடிப்படையில் கடந்த ஆட்சியில் சென்னை மாநகரில் குறுகிய கால இடைவெளியில் விடப்பட்ட பல டெண்டர்களை ரத்து செய்து அதிரடி காட்டினார். அரசு சார்பில் விடப்படும் டெண்டர்கள் நேர்மையான முறையில் சரியான ஒப்பந்ததாரர் கைக்கு செல்ல வேண்டும். கொடுக்கப்பட்ட கால இடைவெளியில் பணிகளை சிறப்பாக செய்து, பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நடவடிக்கை
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ் மூலம் மற்றொரு அசைன்மென்ட்டை முதலமைச்சர் விஜய் முன்னெடுத்துள்ளார். அதன்படி, மாநகராட்சி சார்பில் விடப்படும் ஒவ்வொரு டெண்டரும், அவற்றை கையகப்படுத்தும் ஒப்பந்த நிறுவனமும் வெளிப்படைத்தன்மை உடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஊழல் என்பது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
திட்டப் பணிகளின் தரம் ஒருபோதும் குறைந்துவிடக் கூடாது. இதற்காக 2,000 அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு டெண்டர் வெளியிடுவது எப்படி, அதற்கு பெறப்படும் விண்ணப்பங்களை எப்படி ஆராய்வது, ஒப்பந்த நிறுவனங்களின் அனுபவம் மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் எப்படி வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநகராட்சி டெண்டர்களில் ஊழல் முறைகேடுகள்
கடந்த 20 ஆண்டுகளாகவே சென்னை மாநகராட்சி மீதான பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. டெண்டர்கள் சரியாக வெளியிடுவதில்லை. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு டெண்டர் வழங்கி விடுகின்றனர். டெண்டருக்கான கால இடைவெளியை போதிய நாட்கள் வழங்குவதில்லை.
பல்வேறு குளறுபடிகள் காரணமாக திடீரென ரத்து செய்யப்படும் டெண்டரால் திட்டப் பணிகள் பாதியில் நிற்கின்றன. இது கடைசியில் பொதுமக்களை பாதிக்கிறது. இதுபோன்ற சிக்கல்களை களையும் வகையில் ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தற்போது அதிரடியாக களமிறங்கியிருக்கிறார்.
ஜூலை கடைசி வாரத்தில் அதிகாரிகளுக்கு பயிற்சி
இம்மாதத்தின் கடைசி வாரத்தில் 5 நாட்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாத வகையில் அரை நாள் பயிற்சி, எஞ்சிய அரை நாள் அலுவலகப் பணி என்ற வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்தப் பயிற்சியில் மண்டல துணை பொறியாளர் முதல் தலைமை பொறியாளர் வரை கலந்து கொள்வர்.
இதற்காக அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்படவுள்ளனர். இதுபற்றி பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ், நடைமுறை சிக்கல்கள் வராத வகையில் டெண்டர்களை கோரும் வகையில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
டெண்டர் கோரும் முறை குறித்து சிறப்பு பயிற்சி
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துதல், இ-ஏல முறை, ஃபார்வர்டு பிட்டிங் எனப்படும் அதிகபட்ச விலை கோரும் ஏல முறை எனப் பலவிதமான டெண்டர் முறைகள் தொடர்பாக பயிற்றுவிக்கப்படும் என்றார்.
இந்த பயிற்சி தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாளர் ஓம் ஜஸ்வின் குறிப்பிடும் போது, சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறை இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன்மூலம் ஊழலற்ற டெண்டர் கோரும் முறை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றார்.
