புதுடில்லி: டில்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் மேற்குவங்கத்தில் இருந்து சிஆர்பிஎப் படையின் 20 குழுக்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
‘நீட்’ வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினத்தை போலவே நேற்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோர் மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் 3வது நாளாக இன்றும் (ஜூலை 22) ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது. டில்லியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்குவங்கத்தில் இருந்து சிஆர்பிஎப் படையின் 20 குழுக்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், ”பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கிலும், போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாகவும் கூடுதலாக சிஆர்பிஎப் படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்” என்றனர்.
