அசாமில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு; 21 பேர் பலி

கவுகாத்தி: அசாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், 872 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிகள், ரயில்நிலையங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளன. கோலாகாட், காம்ரூப், ஹோஜாய், திப்ருகார், பிஸ்வநாத், தேமாஜி, சோனித்பூர், உதல்குரி, நகோன், சராசதியோ, காம்ரூப், ஜோர்ஹாட், தின்சூகியா, கர்பி ஆங்லாங், லக்கிம்பூர் மற்றும் சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் 5,64,600க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக, 71 நிவாரண முகாம்களும், 202 நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மழை சார்ந்த விபத்துக்களில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சிவசாகர் மாவட்டத்தில் 13 பேரும், சராசதியோவில் 5 பேரும், கோலாகாட்டில் 2 பேரும், ஜோர்ஹாட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

Source link