வெளிப்படைத் தன்மை இல்லை, நிர்வாகத்தில் முறைகேடு; வேல்ஸ் அறக்கட்டளைக்கு எதிராக அரங்காவலர் வழங்கு

மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகளும், அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் ஆயுள் கால அறங்காவலர்களில் ஒருவருமான கே. அழகு தமிழ்ச்செல்வி, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வேல்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், மறைந்த நடிகர் ஐசரி வேலனின் நினைவாக 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல், நடைபெறுவதாகவும், அதன் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது சகோதரர் ஐசரி கே. கணேஷ், அவரது குடும்பத்தினர் மற்றும் சகோதரி கே.மகாலட்சுமி ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

மனுவில், 2004-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி, மற்ற அறங்காவலர்களின் அறிவோ அல்லது ஒப்புதலோ இன்றி கூடுதல் அறக்கட்டளை ஆவணம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தின் மூலம், ஆயுள் கால அறங்காவலர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை குறைக்கப்பட்டதுடன், கூட்டத் தீர்மானங்களுக்கான குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையும் (Quorum) மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் அறங்காவலர்களை நீக்கும் அதிகாரம் மற்றும் புதிய நிர்வாக விதிமுறைகளும் சேர்க்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த திருத்தங்கள் அனைத்தும் அனைத்து அறங்காவலர்களின் ஒருமித்த ஒப்புதல் இன்றி செய்யப்பட்டதால், அவை சட்டப்படி செல்லுபடியாகாது என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் பலமுறை அடமானம் வைக்கப்பட்டதாகவும், அறக்கட்டளையின் நிதி தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையற்ற வகையில் மாற்றப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அறக்கட்டளையின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, சில அறங்காவலர்கள் நிர்வாகத்திலிருந்து திட்டமிட்டு விலக்கப்பட்டனர், சிலரின் ராஜினாமா கடிதங்கள் போலியாக தயாரிக்கப்பட்டன, அறக்கட்டளை ஆவணங்களில் அனுமதியின்றி திருத்தங்கள் செய்யப்பட்டன, மேலும் தொடர்புடைய நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள் முறையான அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்டதால் கல்வி நோக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை நடைபெறும் வரை அறக்கட்டளையின் முக்கிய நிர்வாக முடிவுகளை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும், இடைக்கால நிர்வாகியை அல்லது நீதிமன்றம் நியமிக்கும் வழக்கறிஞர்-பெறுநரை (Advocate Receiver) நியமித்து அறக்கட்டளையை நிர்வகிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அழகு தமிழ்ச்செல்வி கோரிக்கை விடுத்துள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர் எஸ். இளம்பாரதி தாக்கல் செய்துள்ள இந்த மனு, இந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link