டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் CJP (Cockroach Janta Party) மற்றும் பிற அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக 20 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கம்பெனிகளை டெல்லிக்கு அனுப்பி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகவும், நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியும் நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டது. பதிலுக்கு போலீசார் மீது கல் வீச்சு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவர்களும், இளைஞர்களும் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எல். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
