தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, பல்வேறு காவல் துறை அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சிவபிரசாத் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இதேபோன்று, திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி. எம். விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு மத்திய மண்டலம்/சிபிசிஐடி காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சண்முகப்பிரியா, சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு/லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ராமேஸ்வரம் கோட்ட உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பி.ஆர். மீரா, சென்னை அலுவலக மற்றும் கணினி மயமாக்கல் பிரிவு உதவி காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
