Unified Pension Scheme (ups),ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் – மத்திய அரசு வெளியிட்ட முக்கியமான அப்டேட் – more than 25 thousand retired employees will get additional benefits in unified pension scheme

இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) குறித்த மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கூடுதல் பலன்களைப் பெறத் தகுதியுள்ள 25,756 ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று மக்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஜூலை 9 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 12,258 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 9,823 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தனது பதிலில் கூறியுள்ளது.

இந்தத் தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்தார். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு விருப்பத் தேர்வாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்m செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார். தற்போது மற்ற பகுதிகளுக்கு இதனை விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அரசு கூறியுள்ளது. அதாவது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை மற்ற ஓய்வூதியத் திட்டங்களுக்கோ அல்லது பிற துறைகளில் உள்ள ஊழியர்களுக்கோ விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவு எதுவும் தற்போது இல்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, இத்திட்டம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கூடுதல் பலன்களுக்குத் தகுதியுள்ள 25,756 ஓய்வுபெற்ற ஊழியர்களில், இதுவரை 12,258 பேர் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். இவர்களில் 9,823 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு புதிய ஓய்வூதியத் திட்டமாகும். இது 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மாற்றாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டம் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்றாலும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கும் NPS திட்டத்துக்கு உள்ள அதே வரி விதிப்பு முறைகளே பொருந்தும். ஊழியர் செலுத்தும் 10 சதவீத பங்களிப்புக்கு பிரிவு 80CCD(1)-ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. NPS கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஒரு வரிச் சலுகை கொண்ட விருப்பத் தேர்வாகக் கருதப்படுகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியக் கணக்கீடுகள் எளிமையானவை. ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதியான பணியை நிறைவு செய்திருந்தால் அவர் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்துக்கு இணையான ஓய்வூதியத்தைப் பெறுவார்.

பணிக்காலம் 25 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால் அதற்கேற்ப விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் குறைக்கப்படும். குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவருக்கு, மாதம் ரூ. 10,000 என்ற குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதியாகக் கிடைக்கும். மேலும், 25 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ஒருவர் விருப்ப ஓய்வு (VRS) பெற்றால் அவர் வழக்கமாக ஓய்வுபெறவிருந்த தேதியிலிருந்தே அவரது ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link