ஆடிப்பெருக்கு என்பது தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும். இந்த நாள் பெருக்கை தரும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அதனால் ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்தாலும், சுப காரிய பேச்சுக்களை துவக்கவும், புதிய முயற்சிகளை துவங்கவும் ஏற்ற நாளாக ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு தினம் எப்போது வருகிறது? இந்த நாளை ஏன் கொண்டாடுகிறோம்? இதன் சிறப்பு என்ன? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? பெண்கள் எந்த நேரத்தில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்த கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விசேஷ நாட்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதத்தின் 18ம் நாளை ஆடிப்பெருக்கு அல்லது ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற பெயர்களில் கொண்டாடுகிறோம். இது மங்களகரமான நாளாக கருதப்படுவதால் இந்த நாளில் புதிய தொழில், வியாபாரம் துவங்குவது, சுப காரிய பேச்சுக்கள் துவங்குவது, புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்குவது போன்றவற்றை மக்கள் செய்கிறார்கள். ஆடிப்பெருக்கு அன்று செய்யும் காரியங்களின் பலன்கள் பெருகிக் கொண்டே இருக்கும். இது பெருக்கத்தை தரும் நாள் என நம்பப்படுகிறது. அதனால் இந்த நாளில் திருமணமான பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டால், மாங்கல்ய பலம் கூடும். கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது?
ஆடி மாதம் என்பது பெரும்பாலும் பருவமழை பெய்யும் காலமாகும். அதனால் நன்கு மழை பெய்து, ஆறுகள், குளங்களில் நீர் பெருகி வர வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக நீர் நிலைகளை வழிபடும் நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அதே போல் மக்கள் நீர் நிலைகளின் கரைகளில் ஒன்று கூடி, படையலிட்டு, நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவித்து வழிபடும், சமூக ஒற்றுமையை வளர்க்கும் நாளாகவும் ஆடிப்பெருக்கு கருதப்படுகிறது. பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள் இயற்கையோடு சேர்ந்ததாக இருந்தது. அதனால் இயற்கையை வழிபடும் வழக்கம் பண்டிய காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தைப்பொங்கல் அன்று சூரியனை வழிபடுவதை போல், ஆடிப்பெருக்கு அன்று காவிரி போன்ற நதிகளை மக்கள் வழிபட்டு, நன்றி தெரிவிக்கின்றனர்.
ஆடிப்பெருக்கு 2016 எப்போது?
இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 03ம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அதிலும் பஞ்சமி திதியும், உத்திரட்டாதி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. பஞ்சமி என்பது தீமைகளை அழித்து, நன்மைகளையும், வெற்றியையும் தரும் வாராஹி அன்னையை வழிபடுவதற்கு உரிய நாளாகும். அதே போல் நட்சத்திரங்களில் 26வது நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரம் திருமணம், வளைகாப்பு நடத்துவதற்கு ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு, புதிய விஷயங்களை துவங்குவதற்கு ஏற்ற நாளாகும். தாலிக்கு பொன் உருக்குதல் போன்றவற்றிற்கும் சிறப்பான நாளாகும். இந்த சுப காரியங்கள் அனைத்தையும் செய்வதற்கு ஏற்ற ஆடிப்பெருக்கு நாளும், உத்திரட்டாதி நட்சத்திரமும் இணைந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். அதே போல் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் கடவுள் சிவபெருமான். சிவ வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமையில் உத்திரட்டாதி நட்சத்திரம் வருவதால் இந்த நாளில் சிவபெருமானையும், பைரவரையும் வழிபடும் மிகவும் சிறப்பானதாகும்.
ஆடிப்பெருக்கு நாளில் செய்ய வேண்டியவை :
ஆடிப்பெருக்கு நாளில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று பழங்கள், பல வகையான சாதங்கள் அல்லது நவதானியங்கள், இனிப்பு வகைகள் படைத்து வழிபட வேண்டும். காவிரி கரையில் வசிக்கும் மக்கள் காவிரி அன்னைக்கு சீர் செய்து வழிபடும் வழக்கமும் உள்ளது. இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆயுள் பெருக வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து, தாலிக்கயிறு மாற்றிக் கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமண வரமும், நல்ல கணவரும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வார்கள். புதிதாக திருமணமாவ தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, தங்களின் வாழ்க்கையில் மங்களங்கள் பொங்கி, பெருகு வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள்.
தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் :
தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் காலை 07.45 முதல் 08.45 வரை பூஜை செய்து வழிபட நல்ல நேரம் மாலை 03.15 முதல் 04.15 வரை பூஜை செய்து வழிபடுபவர்கள் காலை அல்லது மாலை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். ஆனால் தாலிக்கயிறு மாற்றுவது காலை நேரத்தில் மட்டுமே மாற்ற வேண்டும்.
Source link
