கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புதிய பேரூராட்சி அலுவலகம் அருகே தீபா ஆர்த்தி தனது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்த நிலையில் தீபா ஆர்த்திக்கு அவரது தாய் அம்பிகா தனக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீபா ஆர்த்தியிடம் அவரது அண்ணன் காந்தக்குமார் அந்த 80 சென்ட் நிலத்தில் தனக்கும் பங்கு வழங்குமாறு கேட்டுத் தொடர்ந்து பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் இந்த நிலையில் தான் தீபா ஆர்த்தி தனக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட 80 சென்று நிலத்தைத் தனது மகன்கள் பேரில் தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்துள்ளார்.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தீபா ஆர்த்தியின் தாயார் அம்பிகா உயிரிழந்த நிலையில் தீபா ஆர்த்தியின் வீட்டிற்கு மது போதையில் அவரது அண்ணன் காந்தகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் வந்து மீண்டும் 80 சென்ட் சொத்து குறித்துக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் காந்தகுமார் தன் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியைத் தனது தங்கை தீபா ஆர்த்தி மீது தூவி அவரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். தொடர்ந்து அதைத் தடுக்க வந்த தீபா ஆர்த்தியின் கணவர் பாபுவையும் அவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரிந்த நான்கு பேரை பிடித்து சங்கராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தீபா ஆர்த்தியின் அண்ணன் காந்தகுமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார், சரத்குமார் வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அகமது மற்றும் தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சங்கராபுரம் பகுதியில் சொத்து தகராறில் தங்கையைக் கொலை செய்த விவகாரத்தில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் நான்கு பேர் கைது குறிப்பிடத்தக்கது.
