புதுடில்லி: மேற்காசியாவில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை ஒன்றே வழி என்று ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் காரணமாக மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில், ஈரான் தாக்குதலுக்கு உள்ளான ஓமனின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குக்குடன் ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்தினேன். அப்போது, அவருக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். மேற்காசியாவில் தற்போது நிலவும் பதற்றமான சூழலைக் குறைக்கவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் பேச்சுவார்த்தை ஒன்றே வழி என்பதை இருவரும் வலியுறுத்தினோம்.
ஓமன் நாட்டின் இறையாண்மையை மீறும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கண்டிக்கிறது. அதேவேளையில், இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக, அவர்களின் சொந்த நாடு திரும்புவதற்காக ஓமன் எடுத்த முயற்சிகளை பாராட்டுகிறேன். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் ஆதரிக்கின்றன, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
