நேற்றைய தினம் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி கைது செய்யபட்டது பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த கைதுக்கு எதிராக பல மாநிலங்களிலும் காங்கிரஸார் போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர். இதனிடையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் பங்கெடுத்துள்ள நிலையில், ராகுல் காந்தி கைதுக்கு முதல்வர் ஜோசப் விஜய் வாய் திறக்காமல் இருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் நுழைவுத்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை இளைஞர்கள், மாணவர்கள் முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர். இதனிடையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் பிரதமர் மோடி வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராகுல் காந்தி ஆகியோரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் காங்கிரஸார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி கைது மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஜோசப் விஜய் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார் என்ற விமர்சனங்கள் கிளம்பியது. அதோடு இந்த விவகாரம் தொடர்பாக விஜய் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. மேலும் இதே திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்திருந்தால் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக மு.க. ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் கொந்தளித்து இருப்பார்கள் எனவும் சோஷியல் மீடியாவில் பதிவுகள் பகிரப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தி கைதுக்கு முதல்வர் ஜோசப் விஜய் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு எதிரானது.
ஒன்றிய அரசுடைய இந்த செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு தவெக முழு ஆதரவை வழங்குவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே தவெகவுடைய சமரசமற்ற நிலைப்பாடு. நீட் தேர்வு போன்றவற்றை ஒழிப்பதற்கு கல்வியை முதலில் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
அதில் ஏதேனும் சட்ட நடைமுறை சிக்கல் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்கால தீர்வாக Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் மூலமாக மாநிலங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவக் கல்வி விசயங்களில் முழு அதிகாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நம்முடைய நிரந்தர தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய பார்வை என அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நம் மக்களுடைய உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக நீட் தேர்வு அறவே அகற்றப்படுவது மட்டுமே இந்த சிக்கலுக்கு ஒரே தேர்வு என்பதை மீண்டும் வலியுறுதுகிறோம். இவ்வாறு முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
