டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு; தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களின் கூட்டம் குவிந்த வண்ணம்  உள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தித் தொடர் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 20ஆம் தேதி அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை  காவல்துறையினரும் துணை ராணுவப்படையினரும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாக தாக்கினர். தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால், இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களை துணை ராணுவப்படைகளை வைத்து கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலுக்கு எதிராக நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல், நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கரப்பான்பூச்சி கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என மாநிலம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே போல், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இடதுசாரி அமைப்புகளான எஸ்.எஃப்.ஐ, டி.ஒய்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தியும் கைது செய்தும் வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது. 

Source link