கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரின் மேற்கூரை மீது அமர்ந்து கொண்டு, பொதுமக்களின் உயிரோடு விளையாடும் வகையில் ‘டெத் ரேஸ்’ பாணியில் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 ‘ஜென்-ஜி’ வாலிபர்களைக் கிணத்துக்கடவு காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே அதிவேகமாகச் சென்ற காரின் ஜன்னல் வழியே தொங்கியபடியும், காரின் கூரை மீது மூன்று நபர்கள் பயமின்றி அமர்ந்து கொண்டும் சென்ற பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இந்தச் சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
கோவை – பொள்ளாச்சி சாலையில் ‘டெத் ரேஸ்’ பாணி சாகசம்: ஆபத்தாக காரில் சென்ற 4 இளைஞர்கள் கைது#coimbatorepic.twitter.com/g5cXRwJLVN
— Indian Express Tamil (@IeTamil) July 22, 2026
​இந்த அராஜகம் தொடர்பாகச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் K. ரெட்டி உத்தரவின் பேரில், கிணத்துக்கடவு காவல் துறையினர் சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் இணைய வீடியோக்களை தீவிரமாக ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் சாகசத்தில் ஈடுபட்ட பீளமேட்டைச் சேர்ந்த சரவணகுமார் (24), இராமநாதபுரத்தைச் சேர்ந்த சென்றாய பெருமாள் (24), மதுரையைச் சேர்ந்த ராகுல்குமார் (19) மற்றும் பாரதி நகரைச் சேர்ந்த நிர்மல்குமார் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கூண்டோடு கைது செய்து, சாகசத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
​கைதான நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் (Cr.No: 211/2026, U/s 281, 125, 292 BNS r/w 184 MV Act) கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இளைஞர்கள் தங்களின் உயிரையும், பிற பாதசாரிகளின் உயிரையும் பணையம் வைத்துச் செய்யும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்புகளுக்கே வழிவகுக்கும் எனக் எச்சரித்து உள்ள காவல்துறை இனி பொதுச் சாலைகளில் சாகசம் புரிவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை பாயும் எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும் பெற்றோர்கள் தங்களது வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விதிமீறல்களைப் பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் மாவட்டக் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
