“அமைச்சர்கள் 'ஜனநாயகன்' வெளியீட்டு வேலைகளை செய்வது வெட்கக்கேடானது" – டி..டிவி தினகரன் ஆவேசம்!

முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்த உடன், முதல்வர் விஜய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆனந்த், “ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை திருவிழாப் போல கொண்டாட வேண்டும்” எனத் தொண்டர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ், “படம் வெளியாகும் 3 மணி நேரம் மட்டும் பழைய ரசிகராக செயல்பட முதல்வரிடம் லீவு கேட்டோம். அவர் அதனை ஒத்துக்கொள்ளவில்லை. இனி வாழ்க்கையில் எப்போது FDFS பார்ப்போம் எனத் தெரியவில்லை” என வருத்தப்பட்டார். அமைச்சர் பிரபு, ஜனநாயகன் திரைப்படத்தின் ஸ்டிக்கரை கதவில் ஒட்டும் வீடியோ வெளியாகி வைரலானது.

ஜனநாயகன்
ஜனநாயகன்

இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”

Source link