முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து ஒருவழியாக நாளை(23.07.2026) வெளியாகவுள்ளது. முதல்வராக முதல் படம் சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகவுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக-வின் தொண்டர்களும் படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர். மேலும் அமைச்சர் ஆனந்த் திருவிழா போல் பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்பதால் பேனர், போஸ்டர், கொடி எனத் திரையரங்கை ரசிகர்களும் நிர்வாகிகளும் அலங்கரித்து வருகின்றன. இன்னும் சில பேர் கோவிலுக்கு சென்று பூஜையும் செய்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த 19ஆம் தேதி முதல் படத்திற்கான முன்பதிவு தொடங்கி படு வேகமாக டிக்கெட்டுகள் விற்று வருகிறது. ஆனால் வழக்கம் போல் நடக்கும் சட்டவிரோதமான டிக்கெட் விலை உயர்வு அரங்கேறி வருகிறது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ஆயிரக்கணக்கில் விலையை கூட்டி விற்றுவருகின்றனர். அந்த வகையில் நாமக்கலில் ஒரு திரையரங்கில் ரசிகர்களுக்கும் ஊழியர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் தரப்பில், “300 ரூபாய்க்கு டிக்கெட் தருவதாக கூறி 500 ரூபாய்க்கு விற்கின்றனர். கேட்டால் விநியோகஸ்தர் தான் 500 ரூபாய்க்கு விற்க சொன்னதாக சொல்கிறார்கள். அருகில் இருந்த இரண்டு தியேட்டர்களும் 300 ரூபாய்க்கு தான் விற்றார்கள். ஆனால் இவர்கள் அதே 300 ரூபாய் எனக் கூறிவிட்டு 500 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி மீதி பணம் தருவதாக சொல்லி விட்டு அந்த பணத்தை கேட்டால் தரமாட்டுகிறார்கள்”
என்கின்றனர்.
திரையரங்கம் தரப்பில், “இதுவரை விஜய் ரசிகர்கள் எங்களிடம் 100,200-க்கு டிக்கெட் வாங்கி 500, 1000-த்துக்கும் விற்றிருக்கிறார்கள். இதே ஜனநாயகன் படத்திற்கு ஜனவரி மாதம் 300 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்றார்கள். பட கம்பெனி என்ன சொல்கிறார்களோ அதைத் தான் நாங்கள் செய்கிறோம், எங்களுக்கும் இவங்களுக்கும் சம்மதம் இல்லை” என்றனர்.
இதே போல் சேலத்தில் அரசு நிர்ணயித்த 190 ரூபாய் டிக்கெட்டுகள் கவுண்டரிலேயே 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. ஊழல் ஒழிக்கப்படும் என உரக்க சொன்ன முதல்வரின் படத்துக்கே சட்டவிரோதமாக கூடுதல் கட்டணம் வசூலுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எங்க அண்ணன் படத்தை ஆயிரம் ரூபாய் கொடுத்தும் நாங்க பார்ப்போம் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
