சோனம் வாங்சுக் உடல்நிலை எப்படி இருக்கிறது; மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்

புதுடில்லி: சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக உள்ளதாக மருதுதுவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து 21 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அவரை, டில்லி போலீசார் டில்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவர் சட்ட விரோதமாக மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி, அவரது மனைவி கீதாஞ்சலி, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனியார் மருத்துவமனையில் வாங்சுக்கிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக மேதந்தா மருத்துவமனைக்கு சோனம் வாங்சுக் மாற்றப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந் நிலையில் அவரின் உடல்நிலை பற்றிய விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனைக்கு சோனம் வாங்சுக் மாற்றப்பட்டு உள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நல்ல சுயநினைவுடன் உள்ளார். சோனம் வாங்சுக்கிற்கு அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் அவரின் ஒப்புதல் பெற்றே தரப்படுகிறது.

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் கூறி உள்ளது.

Source link