‘காட்ஸில்லா’ பட நடிகை கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு!

ஹாலிவுட்டில் 2021-ஆம் ஆண்டு வெளியான ‘காட்ஸில்லா வெஸ் காங்’ படத்தில் காது கேளாத கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் இளம் நடிகை கேலி ஹாட்டில். இவர் உண்மையிலேயே காது கேளாதவர் ஆவார். இதையடுத்து 2024ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா பட அடுத்த பாகத்திலும் நடித்திருந்தார். இதற்கு முன்பாக விளம்பர படங்களில் தனது நடிப்பை தொடங்கியுள்ளார். அதன் மூலமாகவே திரைப்பட வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். 

இவர் தற்போது கார் விபத்தில் இறந்துள்ளார். இதனை கேலியின் தந்தை ஜோசுவா ஹாட்டில், ஃபேஸ்புக்கில் கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். அந்த வீடியோவில் சைகை மொழியில் பேசும் அவர், மேரிலாண்டில் விபத்து நடந்ததாக வந்ததாகவும் அதில் தனது மகள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டார். பின்பு அவர் படித்த பள்ளியான ‘டெக்சாஸ் ஸ்கூல் ஃபார் தி டீஃப்’ (Texas School for the Deaf) நிர்வாகமும் இதனை உறுதி செய்துள்ளது. 

விபத்து குறித்து வெளியான தகவலில் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் ஐஜாம்ஸ்வில்லில் உள்ள விண்ட்சர் சாலையில் அதிகாலை 2:52 மணியளவில் ஒரு ஹோண்டா கார் ​சாலையின் வலதுபுறம் சென்று ஒரு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. பின்பு காரை ஓட்டிய 19வயதுடைய நபரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் நடிகை கேலியும் கொண்டு செல்லப்பட்டார். இருவரையும் சோதித்த மருத்துவர்கள் கேலி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் காரை ஓட்டியவர் தற்போது சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் வேகமாக சென்றதே எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஹாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காட்ஸில்லா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Source link