அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவரில் முதலமைச்சர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் அரசுப் பள்ளி சுற்றுச் சுவர் முழுக்க ஜனநாயகன் திரைப்படம் குறித்த போஸ்டர்கள் ஒட்டி கல்விக் கூடத்தின் மாண்பையே சிதைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான திரு. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை அவரது… pic.twitter.com/qfyj7FXbhi
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 22, 2026
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை அவரது தொண்டர்களும் ரசிகர்களும் கொண்டாடுவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், அரசுப் பள்ளிச் சுவர்களை பாழ்படுத்தி இப்படி கொண்டாடுவது அநாகரீகமான செயலாகும். பள்ளி சுவர்கள் ஒன்றும் கட்-அவுட்களையும் போஸ்டர்களையும் ஒட்டுவதற்கான தியேட்டர் வாசல்கள் அல்ல. பொன்மொழிகளும் கல்வி சார்ந்த தகவல்களும் இடம்பெற வேண்டிய சுவர்களில் திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது, பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும். த.வெ.க. ஆட்சியில் ரீல்ஸ் மற்றும் போஸ்டர் கலாச்சாரங்கள் வரம்பு மீறி கல்விக் கூடங்கள் வரை சென்று, அவற்றின் மாண்பைச் சிதைப்பதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள திரைப்படச் சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
