சவுதிக்கு அணுசக்தி கதவை திறந்தது அமெரிக்கா: யுரேனியம் சுத்திகரிக்க டிரம்ப் பச்சைக்கொடி

வாஷிங்டன்: சவுதி அரேபியா அமைதி வழி தேவைகளுக்காக, தன் சொந்த மண்ணிலேயே அணுசக்தி திட்டங்களை செயல்படுத்தவும், யுரேனியத்தை சுத்திகரிக்கவும் வழிவகுக்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் முக்கிய பிரச்னையாக இருப்பதே, அணுசக்தி திட்டம் தான். அதில், அமெரிக்காவின் கெடுபிடிகளுக்கு ஈரான் சம்மதிக்காததால், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் ஏற்பட்ட போரால், மேற்காசியாவில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துள்ள புதிய முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.

அதாவது, உலகளாவிய பாதுகாப்பு தரநிலைகளை மீறி, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு யுரேனியத்தை செறிவூட்டும் தொழில்நுட்பத்தை வழங்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை அவர் செய்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் இந்த ஒப்பந்தத்தை, 30 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் தயாரித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக ‘வெஸ்டிங்ஹவுஸ்’ போன்றவை சவுதி அரேபியாவின் அணு மின் நிலையங்கள் மற்றும் எரிபொருள் சுழற்சி திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும்.

அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் கிரிஸ் ரைட் மற்றும் சவுதி எரிசக்தித்துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர், இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

வழக்கமாக பிற நாடுகளுடன் அமெரிக்கா செய்து கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தங்களில், அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்பதற்காக, பல கடுமையான நிபந்தனைகளும் பாதுகாப்பு விதிகளும் விதிக்கப்படும். ஆனால், தற்போதைய சவுதி அரேபியா உடனான ஒப்பந்தத்தில், அந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சர்வதேச கட்டுப்பாடுகள் இன்றி, சவுதி அரேபியா தன் சொந்த மண்ணிலேயே யுரேனியத்தை சுத்திகரிக்க அனுமதிப்பது, எதிர்காலத்தில் அந்நாடு அணு ஆயுதங்களை தயாரிக்க வழி வகுக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Source link