புதுடில்லி: நாட்டில் காஸ் சிலிண்டரின் விநியோகம் சீராக இருப்பதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய

புதுடில்லி: நாட்டில் காஸ் சிலிண்டரின் விநியோகம் சீராக இருப்பதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சாபஹார் துறைமுகத்திற்கான நிபந்தனையுடன் கூடிய பொருளாதாரத் தடை விலக்கை ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டிப்பதற்கான வழிகாட்டுதலை அமெரிக்கா வழங்கியுள்ளது. இதையடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் தரப்பினருடனும் இந்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த மோதலுக்கு விரைவில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலை மீண்டும் கண்டிக்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறியதாவது: பிஎன்ஜி எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் மாநில அரசுகளுக்கு 10 சதவீத கூடுதல் வணிக பயன்பாட்டு எல்பிஜி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் சுமார் 1.25 லட்சம் புதிய வீட்டு உபயோக, வணிக மற்றும் தொழில்முறை காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்காசிய போர் பதற்றம் நிலவினாலும், எந்தவொரு விநியோகஸ்தரிடமும் கையிருப்பு இல்லை என்ற புகார் ஏதும் வரவில்லை. ஆன்லைன் முன்பதிவு 94 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் பீதியில் முன்பதிவு செய்வது குறைந்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 57 லட்சம் காஸ் சிலிண்டர் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன. விநியோகம் வழக்கம் போல நடந்து வருகிறது.

அதேபோல, பெட்ரோல் பங்க்குகளில் தட்டுப்பாடு ஏதும் இல்லை. போக்குவரத்துக்கான சிஎன்ஜி மற்றும் வீட்டு உபயோக பிஎன்ஜி விநியோகம் எந்தத் தடையுமின்றி 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வணிக ரீதியான எல்பிஜி நுகர்வோர்கள், சிஎன்ஜிக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்காக பல நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 5,600க்கும் மேற்பட்ட எல்பிஜி நுகர்வோர் பிஎன்ஜிக்கு மாறியுள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.

Source link