திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டப்பாளையத்தில் 10 சென்ட் நிலத்திற்குள் இதுவரை 300-க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்துவர்களின் சடலங்கள் புதைக்கப்படும் அவலம் நீடித்து வருவதாகவும், சாதிய பாகுபாடுகளைக் களைந்து தலித் கிறிஸ்துவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்றும் எவிடென்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டம்பாளையத்தில் சுமார் 10 சென்ட் நிலத்தில் இதுவரை 300 கிறிஸ்துவ தலித்களின் சடலம் புதைக்கப்படுகிற அவலம் நடந்துள்ளதாகவும் இரட்டை ஆலயம், இரட்டை கல்லறை என்கிற சாதிய பாகுபாடு நிலவும் கொடுமை உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள எவிடென்ஸ் கதிர், “தலித் கிறிஸ்துவர்களை, எஸ்.சி. பட்டியல் சேர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எவிடென்ஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான எவிடென்ஸ் கதிர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் அருகில் உள்ள கிராமம் கோட்டப்பாளையம். இக்கிராமத்தில் வசித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 89 வயது கொண்ட ஆசிரியர் ராஜு அவர்கள் வயது மூப்பின் காரணமாக கடந்த 17.07.2026 அன்று இறந்து போனார். அவரது சடலத்தை பொது கல்லறையில் அடக்கம் செய்யக்கூடாது என்று அங்கிருக்கக்கூடிய சில சாதி கிறிஸ்துவர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் சட்டம் மற்றும் தொடர் போராட்டத்தின் விளைவாக ராஜு அவர்களின் சடலம் 20.07.2026 அன்று விடியற்காலை 1.30 மணியளவில் பொது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
கிறிஸ்துவ கல்லறையில் இத்தகைய சாதி பாகுபாடு இருந்ததனால் அவரது சடலம் 3 நாட்களுக்கு பிறகு புதைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து எமது எவிடென்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் 21.07.2026 அன்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.
கோட்டப்பாளையம் கிராமத்தில் கிறிஸ்துவ பறையர்கள், கிறிஸ்துவ ரெட்டியார்கள்., கிறிஸ்துவ வன்னியர்கள், கிறிஸ்துவ நாயுடுகள், கிறிஸ்துவ வெள்ளாளர்கள், கிறிஸ்துவ உடையார், கிறிஸ்துவ புதிரை வண்ணார் சமூகத்தினர் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். அதேபோன்று இந்து சமூகத்தைச் சேர்ந்த முத்துராஜா, பறையர், தேவேந்திரகுல சமூகத்தினர், அருந்ததியர், ரெட்டியார், குரும்ப கவுண்டர், தெலுங்கு ஒட்டர், சேனிய செட்டியார் உள்ளிட்டோரும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கிறிஸ்துவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே எவ்விதமான முரண்பாடோ பாகுபாடோ இல்லை. ஆனால் கிறிஸ்துவர்களிடையே சாதி பாகுபாடு தலைவிரித்தாடுகிறது.
இக்கிராமத்தில் புனித மரிய மதலேனாள் திருத்தலம் உள்ளது. மிகவும் பிரமாண்டமான பெரிய ஆலயமாகும். தலித் குடியிருப்பில் மிக சிறிய அளவில் சுமார் 40 பேர் மட்டுமே உட்காரக்கூடிய புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. அதுவும் புனித செபஸ்தியார் ஆலயம் 2014ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்த ஆலயம் குடில் போன்றே இருந்துள்ளது.
இங்குள்ள கல்லறை சாதி கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும், தலித் கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும் உள்ளது. அதாவது இக்கிராமத்தில் சாதி கிறிஸ்துவர்கள் 60 விழுக்காடும், தலித் கிறிஸ்துவர்கள் 40 விழுக்காடும் உள்ளனர். இரண்டு கல்லறையுமே புறம்போக்கு நிலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. சாதி கிறிஸ்துவர்கள் கல்லறை 2 ஏக்கர், 92 சென்ட் உள்ளது. தலித் கிறிஸ்துவர்கள் கல்லறை வெறும் 10 சென்ட்டுக்குள் தான் உள்ளது.
அங்குள்ள தலித் கிறிஸ்துவ மக்கள் 120 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 10 சென்ட் கல்லறையில் தான் எங்கள் குடும்பத்தாரின் பிணங்களை புதைத்து வருகிறோம் என்று கூறினார்கள். குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட பிணங்களை அந்த 10 சென்ட் நிலத்திற்குள் தான் புதைத்து வருகிறோம் என்று அதிர்ச்சியான தகவலை கூறினார்கள். எங்களுடைய தோராயமான ஆய்வில் 300 பிணங்களாவது புதைக்கப்பட்டு இருக்கும்.
ஒரே குழியில் 2 – 3 பிணங்களும் புதைக்கப்படுகிற அவலம் வேதனை அளிக்கிறது. தலித் கல்லறை அசுத்தமாகவும் துர்நாற்றத்துடன் உள்ளது. பொது கல்லறை காம்பவுண்ட் கட்டப்பட்டு சுகாதாரத்துடன் நல்ல கட்டிட வசதியுடன் நுழைவு வாயிலுடன் உள்ளது.
இக்கிராமத்தில் சாதி ரீதியான தனி சப்பரம், தனி கோவில், தனி கல்லறை இருப்பது வேதனையின் உச்சம். இங்குள்ள அனைத்து மக்களும் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். கத்தோலிக்கம் என்றால் அனைவருக்கும் பொதுவானது என்று அர்த்தம். ஆனால் இங்குள்ள நிலை சாதியால் மக்களை பிளவுபட வைத்திருப்பது நூற்றாண்டு கால துயரம்.
இக்கிராமத்தில் ராஜு (89) – சலேத்மேரி (82) தம்பதியருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மூத்த மகன் ரோம் நகரில் கிறிஸ்துவ பாதிரியாராக சேவை செய்து வருகிறார். இத்தம்பதியினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவருமே ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்கள்.
இந்த இரட்டை கல்லறை இருப்பது அங்குள்ள தலித் கிறிஸ்துவர்களுக்கு வேதனை அளித்திருக்கிறது. இதனால் இரட்டை கல்லறையை எதிர்த்து தலித் கிறிஸ்துவர்கள் தரப்பை சேர்ந்த ராஜு, ஜோசப், சூசை மாணிக்கம், டேவிட், தாஸ் பிரகாஷ் ஆகியோர் துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2014ம் ஆண்டு வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நடைபெற்று கடந்த 27.08.2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் பொது கல்லறையில் தலித் கிறிஸ்துவர்களை புதைப்பதற்கு யாரும் இடையூறோ, தடையோ போடக்கூடாது என்று தலித் கிறிஸ்துவர்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கப்பெற்றது.
இந்த வழக்கின் முதல் மனுதாரரான ராஜு வயது மூப்பின் காரணமாக கடந்த 17.07.2026 அன்று இறந்து போகிறார். தலித் கிறிஸ்துவர்கள் தரப்பின் வழக்கறிஞர்கள், ராஜு குடும்பத்தினர் மற்றும் தலித் கிறிஸ்துவ மக்களிடம் பொது கல்லறையில் அய்யா ராஜு அவர்களை நல்லடக்கம் செய்ய வேண்டும். ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு நமக்கு சாதகமாக உள்ளது என்று கூறியுள்ளனர். அதனடிப்படையில் இறந்து போன பெரியவர் ராஜுவின் குடும்பத்தினர்கள் மற்றும் அப்பகுதி தலித் கிறிஸ்துவர்கள் அங்குள்ள பங்கு தந்தை மைக்கேல்ராஜ் அவர்களிடம் பொது கல்லறையில் அய்யா ராஜு அவர்களை புதைக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர். இதற்கு அப்பகுதியில் உள்ள சாதி கிறிஸ்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அப்பகுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. தலித் கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரி இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலித் கிறிஸ்துவர்களின் பக்கம் வழக்கறிஞர்கள் கென்னடி மற்றும் தாஸ் பிரகாஷ் ஆகியோர் ஆதரவாக இருந்துள்ளனர்.
இதனிடையே கோட்டாட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கடந்த 19.07.2026 அன்று நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தலித் கிறிஸ்துவர்கள் தரப்பிலும், சாதி கிறிஸ்துவர்கள் தரப்பிலும் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவினை சுட்டிக்காட்டி, பொது கல்லறையில் புதைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு இரண்டு தரப்பிலும் உறுதி செய்யப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால் ராஜு அவர்களின் சடலத்தை தலித் கிறிஸ்துவர்கள் குடியிருப்பில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் மட்டுமே வைத்து பூசை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தள்ளனர். இது அப்பட்டமான சாதிய பாகுபாடு. அதாவது சாதி கிறிஸ்துவர்கள் இறந்து போனால், புனித மரிய மதலேனாள் திருத்தலத்திலும், தலித் கிறிஸ்துவர்கள் இறந்துபோனால் புனித செபஸ்தியார் ஆலயத்தில் பூசை நடத்துவது சாதிய பாகுபாடாகும். கோட்டாட்சியர் இத்தகைய உத்தரவு போட்டிருப்பது சாதிய பாகுபாட்டிற்கு ஆதரவான நிலைப்பாடாகும். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பரிந்துரைகள்:
தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் கல்லறை இதர கிறிஸ்துவ சமூக வழிபாட்டு கட்டிடங்களில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது. அப்படி கடைபிடிப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முசிறி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளது. ஆகவே கோட்டப்பாளையம் கிராமத்தில் தலித் கிறிஸ்துவர்களின் சடலத்தையும் புனித மரிய மதலேனாள் திருத்தலத்தில் பூசை வைக்க உத்தரவிட வேண்டும்.
தலித் கிறிஸ்துவர்கள் பட்டியல் பிரிவில் வருவதில்லை. அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று குடியரசுத்தலைவர் ஆணை கடந்த 1950ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலித் கிறிஸ்துவர்களும் இந்து கிறிஸ்துவர்களும் உறவினர்கள். ஒரே சாதியில் வருபவர்கள். ஆனால் கிறிஸ்துவத்தை வழிபடுவதனால் அவர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது மிகப்பெரிய அநீதியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் தலித் கிறிஸ்துவர்களை, எஸ்.சி பட்டியலில் சேர்ப்பதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய ஆயர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரே ஆலயம், ஒரே கல்லறை, ஒரே வழிபாட்டு முறை என்கிற கத்தோலிக்க சாசனத்தை அறிவிப்பாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற இரட்டை கல்லறை, இரட்டை ஆலய வழிபாட்டு முறை போன்றவை இருப்பதை கண்டும் காணாமல் இருப்பது கிறிஸ்துவத்திற்கு செய்யும் அநீதி என்பதை ஆயர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என்று எவிடென்ஸ் பதிவிட்டுள்ளார்.
